Cricket
இந்த கியாரண்டி இல்லாம அணிக்கு திரும்ப மாட்டேன் – முகமது ஷமி
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்புவது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அடுத்த மாதம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி களமிறங்குவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் தெரிவித்த கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய முகமது ஷமி அதன்பிறகு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல்நலம் தேறி வருகிறார். தற்போது மீண்டும் அணியில் இணைவதற்கு தயார் என்று அவர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார்.
இதன் காரணமாக அவர் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதுதவிர இந்திய அணிக்கு திரும்புவதற்கான ஆயத்த போட்டியாக பார்க்கப்படும் துலீப் கோப்பை தொடரிலும் முகமது ஷமி சேர்க்கப்படவில்லை.
இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி முகமது ஷமி அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ரஞ்சி கோப்பை தொடரில் வங்காள அணிக்காக விளையாடுவார் என்றும் அதன் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடுவார் என்று தெரிகிறது.
இந்திய அணியில் மீண்டும் இணைவது தொடர்பாக பேசிய முகமது ஷமி, “நான் நீண்ட காலமாக அணியில் விளையாடாமல் இருக்கிறேன். இதனாலேயே கூடிய விரைவில் அணியில் திரும்புவதற்கு முயற்சிக்கிறேன். ஆனால் நான் திரும்பி வரும்போது என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.”
“நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது எனக்கு நல்லது. மேலும் நான் மீண்டும் காயமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் நான் வங்கதேசம், நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலியா தொடருக்கு திரும்புகிறேனா என்பது முக்கியமில்லை. நான் ஏற்கனவே பந்து வீச ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நான் சொன்னது போல், நான் எந்த அபாயத்தையும் எடுக்க விரும்பவில்லை.”
“நான் 100 சதவீதம் ஃபிட்டாக இருப்பதாக உணரும் வரை, எந்தவிதமான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மீண்டும் அணிக்கு வர ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் உள்நாட்டில் விளையாட வேண்டும் என்றால், நான் அதற்கும் கூட தயங்கவே மாட்டேன்,” என்று கூறினார்.