Cricket
T20 WorldCup: இந்தியா செமி ஃபைனலுக்கு மட்டும் ரிசர்வ் டே இல்லாதது ஏன்? #INDvsENG
தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வே டே ஒதுக்கப்பட்ட நிலையில், இந்தியா – இங்கிலாந்து மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை.
இந்தியா போட்டிக்கு ஏன் ரிசர்வ் டே இல்லை?
முதல் அரையிறுதியைப் போல் அல்லாமல் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடந்து, இறுதிப் போட்டிக்கு அதிக இடைவெளி இல்லை. இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கும் இறுதிப்போட்டிக்கும் இடையில் ஒரே ஒருநாள் இடைவெளி இருப்பதாலேயே இந்தப் போட்டிக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்படவில்லை என்கிறது ஐசிசி.
இந்தியாவுக்கு முன்னுரிமையா?
ஐசிசி விதிப்படி இந்த போட்டி அட்டவணை முடிவு செய்யப்பட்டு அனைத்து நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளும் ஒப்புக்கொண்டு கையொப்பமிட்ட பின்னரே, இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியாவுக்கு மட்டும் முன்னுரிமை என்கிற வாதம் தவறானது.
அதேபோல், இந்தியா – இங்கிலாந்து போட்டியை முடிந்தவரை நடத்தி முடிக்கவே ஐசிசி திட்டமிட்டிருக்கிறது. இதற்காக போட்டிக்குக் கூடுதலாக 250 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கயானா நேரப்படி காலை 10.30 மணிக்குத் தொடங்க வேண்டிய போட்டி, மழையால் தாமதமானால் இறுதியாக மாலை 4.14 மணி வரை காத்திருக்கலாம். அப்போது 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கும். முதலில் பேட் செய்யும் அணி 10 ஓவர்கள் பேட் செய்து, இரண்டாவது பேட் செய்யும் அணி 5 ஓவர்கள் பேட் செய்தாலே முடிவை அறிவிக்க முடியும் என்கிறது ஐசிசி விதி.
மழையால் கைவிடப்பட்டால் என்ன ஆகும்?
இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி மழையால் முழுவதுமாகக் கைவிடப்பட்டால், குரூப் சுற்றுகளில் முதலிடம் பிடித்த இந்திய அணி தானாகவே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.