latest news
அண்ணாமைலை வரட்டும் அவசரம் வேண்டாம்…மேலிட உத்தரவை பற்றி சொன்ன தமிழிசை…
மது ஒழிப்பு மாநாடு, பெரியார் நினைவிடத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் செய்த மரியாதை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடையே எழுந்துள்ள வார்த்தைப் போர், ஒன்றிணைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரைவில் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் நம்பிக்கை என தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாக காணப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு சதவீதத்தில் உயர்வை காட்டிய பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு காட்டி வரும் முனைப்பு என தினசரி வேகம் கூடி வரவும் செய்கிறது தமிழக அரசியல்.
தனது மேற்கல்விக்காக மூன்று மாதங்கள் வெளிநாடிற்கு சென்றுள்ளார் பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை.
அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா தலைமையிலான குழுவின் முடிவின் படியே இப்போது தமிழக அரசியலில் தனது காய் நகர்வுகளை செய்து வருகிறது பாஜக. பாஜக தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அண்ணாமலை வரும் வரை பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் ஏதும் செய்யாமல் உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே கவனத்தை செலுத்த மேலிட உத்தரவு வந்துள்ளதாக தமிழிசை செளந்தரராஜன் சொல்லியிருக்கிறார். அண்ணாமலை வந்த பிறகே பெரிய நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழக பாரதிய ஜனதா கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தமிழிசை செளந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.