Finance
நாங்க அப்படி எல்லாம் நினைக்கல…பாரபட்சம் அறவே கிடையாது…தமிழிசை விளக்கம்…
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பல விதமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது மத்திய அரசு. எதிர்கட்சி முதல் பிராந்திய கட்சிகள் வரை தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பிகாருக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள கட்சிகள்.
ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை பாஜகவிற்கு கிடைக்கவில்லை என்றாலும் அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தோடு தான் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதில் ஆந்திர மாநில சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கும், பிகாரின் நிதீஷ் குமாரின் கட்சிக்கும் மிகப்பெரிய பங்கு இருந்து வருகிறது. ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டி கிடைக்க இந்த இரு கட்சிகளின் எம்.பி.க்களுமே காரணமாக மாறினார்கள்.
இந்நிலையில் ஆந்திரா, பிகார் மாநிலங்களுக்குத் தான் பட்ஜெட் சாதகமாக அமைந்துள்ளது. பிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் தனது பட்ஜெட் மீதான விமர்சனமாக இதே கருத்தையே முன் வைத்தார். இதற்கிடையில் தெலுங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுனரும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் கட்சிகளின் கருத்துக்களுக்கு விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதில் தனிப்பட்ட சலுகைகள் என்பது எந்த மாநிலத்திற்கும் வழங்கப்பட வில்லை. அனைத்து மாநிலங்களும் சமமாகவே பார்க்கப்பட்டுத் தான் வரப்படுகிறது என சொல்லியிருக்கிறார். இந்த இரு மாநிலங்களின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு பிறகு ஆந்திர தலை நகரத்தை கட்டமைக்கும் பிரச்சனை இருந்தது.
தெலுங்கானவின் ஆளுநராக இருந்ததால் இதை பற்றி தனக்கு அதிகம் தெரியும், தலை நகரை கட்டமைக்கத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழிசை செளந்தரராஜன் தனது விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.