latest news
அளவாக குடியுங்கள் என ஒரு கட்சி தலைவர் சொல்லலாமா?!… கமலை வாறிய விஜய பிரபாகரன்!…
கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து பலரும் உயிரிழந்தனர். சிலருக்கு பார்வை போய்விட்டது. எனவே, அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என பலரும் அங்கு சென்றனர்.
இதில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் ஒருவர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘மக்களை குடிக்க வேண்டாம் என சொல்ல முடியாது. அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். அளவாக குடியுங்கள் என வேண்டுமானால் அறிவுரை சொல்லலாம். டாஸ்மாக் அருகேயே விழிப்புணர்வு பலகை வைக்கலாம். ஏனெனில், மெடிக்கல் ஷாப்பை விட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது’ என பேசினார்.
கமல் எப்போதும் நடைமுறைக்கு என்ன ஒத்து வருமோ அதைத்தான் பேசுவார். அவர் சொன்னதில் தவறு இல்லை என கமல் ரசிகர்கள் சொன்னாலும், கமல் குடிப்பதை ஆதரிக்கிறார், திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறார் என அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்தவர்களை அவரை சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ‘ மது அருந்துவதே தவறான விஷயம். அளவாக குடியுங்கள்.. கொஞ்சமாக குடியுங்கள்.. என ஒரு கட்சி தலைவரே சொல்வது இளைஞர்களை தவறான பாதைக்கு செல்ல ஊக்குவிக்கும்’ என பேசியிருக்கிறார்.