Cricket
மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வங்கதேசம் அணி 16 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போட்டியில் வங்கதேசம் அணி முதல் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி மிகவும் எமோஷனலாக இருப்பதாக வங்கதேசம் அணியின் கேப்டன் தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்களையே எடுத்தது. எனினும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேசம் அணி ஸ்காட்லாந்து அணியை 20 ஓவர்களில் 103 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இதனால் வங்கதேசம் அணி 16 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேசிய வங்கதேசம் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா ஜோதி, “பத்து ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றது மிகவும் எமோஷனலாக இருக்கிறது. இந்த வெற்றிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.”
“எவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாடினாலும், போட்டியில் வெற்றி பெறாத வரை அதில் எந்த பலனும் இல்லை. மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரை நீண்ட காலத்திற்கு பிறகு, நாங்கள் எதையோ செய்திருக்கிறோம் என்ற எண்ணம் கொண்டிருக்கிறோம்.”
“வங்கதேசத்தில் சரியான தருணத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன்பிறகு அதை வைத்தே முன்னேற வேண்டும் என்று நாங்கள் கூறுவோம். தற்போது நாங்கள் இன்னும் பெரிய விஷயத்தை அடைவதற்கு கனவு காணப்போகிறோம். இதேபோன்று எங்களால் இதைவிட இன்னும் சிறப்பாக சாதிக்க முடியும் என்று வங்கதேசத்தில் உள்ள ரசிகர்கள், குடும்பத்தார் மற்றும் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்போர் கனவு கொண்டுள்ளனர்,” என்று தெரிவித்தார்.