Cricket
உலக கோப்பை 2023: திலக் வர்மாவை நினைப்பீங்களா? அஷ்வின் சரமாரி கேள்வி..!
இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் திறமை மிக்க திலக் வர்மாவை உலக கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய வலியுறுத்தி இருக்கிறார். இவர் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படும் திறமை கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்களில் பலர் தொடர்ந்து காயங்களில் இருந்து மீண்டும் வரும் நிலையிலேயே உள்ளனர்.
ஆசிய கோப்பைக்கு முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் தயாராக முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில், அஜித் அகர்கார் தலைமையிலான தேர்வுக்குழு ஆசிய போட்டிகளுக்கான அணியில் இருந்து திலக் வர்மா விடுவித்து, உலக கோப்பை தொடருக்கு தயாராகும் பட்சத்தில், திலக் வர்மாவை ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட வைக்கும் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் கூறிய கருத்திற்கு முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் தயாராக முடியாத நிலையில், திலக் வர்மா 15 வீரர்கள் அடங்கிய இறுதி பட்டியலில் இருப்பதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது வீரரான திலக் வர்மா வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 39, 50 மற்றும் ஆட்டமிழக்காமல் 49 ரன்களை குவித்து இருக்கிறார். இவரது ஆட்டம் மற்றும் அணியில் தேர்வு செய்ய வேண்டியது பற்றி தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியதாவது..,
“இது மிகவும் நெருக்கமான ஒன்று, மேலும் உலக கோப்பைக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். இதனால், போதுமான பேக்கப் வீரர்கள் இல்லாத சமயத்தில், அவர்கள் திலக் வர்மா பற்றி நினைத்து பார்ப்பார்களா? ஏனெனில் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடி இருக்கிறார்.”
“முன்னணி அணிகளில் உள்ள சுழற் பந்துவீச்சாளர்களை கொஞ்சம் பாருங்கள். ஆஸ்திரேலிய அணியில் ஆஷ்டன் அகர், இங்கிலாந்து அணியில் மொயின் அலி மற்றும் அதில் ரஷித் ஆகியோர் உள்ளனர். பெரும்பாலான அணிகளில் இடது கை பேட்டர்களுக்கு சவால்விடும் வகையிலான சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லை. இதன் காரணமாக திலக் வர்மா அணியில் இருப்பது அவசியம்.”
“இப்போதே இதுபற்றி பேசுவது கொஞ்சம் சீக்கிரம் தான், ஆனால் அவர்கள் இவரை ஆப்ஷனாக பார்ப்பார்களா? குறைந்தபட்சம், அனைவரும் தன்னை பார்க்கும்படி அவர் விளையாடி இருக்கிறார். அவரின் ஆட்டம் தேர்வுக்குழுவில் உள்ள யவரையும் நிச்சயம் ஆச்சரியப்பட வைத்திருக்கும்,” என்று தெரிவித்தார்.