சென்னை: அவசர பணத்தேவைக்காக வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருந்த காலம் மலையேறிவிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ‘ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்’ (RTXC) மற்றும் டிஜிட்டல் தனிநபர் கடன் மூலம் ₹35 லட்சம் வரை உடனடி கடன் வசதியை வழங்குகிறது.
யாரெல்லாம் இந்த கடனைப் பெறலாம்? (தகுதி வரம்புகள்)
இந்தத் திட்டம் பிரத்யேகமாக எஸ்பிஐ வங்கியில் சம்பளக் கணக்கு (Salary Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வருமானம்: விண்ணப்பதாரரின் நிகர மாத வருமானம் குறைந்தது ₹25,000 ஆக இருக்க வேண்டும்.
வேலை: மத்திய/மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் (PSU), தேசிய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
சிபில் (CIBIL) ஸ்கோர்: பாதுகாப்புப் படை மற்றும் அரசு ஊழியர்களுக்கு 650-க்கு மேலாகவும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 670-க்கு மேலாகவும் சிபில் ஸ்கோர் இருப்பது அவசியம்.
முக்கிய சிறப்பம்சங்கள்:
கடன் தொகை: குறைந்தபட்சம் ₹1 லட்சம் முதல் அதிகபட்சம் ₹35 லட்சம் வரை கடன் பெறலாம் (உங்கள் மாத வருமானத்தைப் பொறுத்து இது 24 மடங்கு வரை இருக்கலாம்).
வட்டி விகிதம்: தற்போது வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 11.15% முதல் 14.30% வரை வசூலிக்கப்படுகிறது. இது உங்கள் பணிபுரியும் நிறுவனம் மற்றும் கடன் வரலாற்றைப் பொறுத்து மாறுபடும்.
கால அவகாசம்: கடனைத் திருப்பிச் செலுத்த 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் (84 மாதங்கள்) வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.
காகிதமில்லா நடைமுறை: எஸ்பிஐ-யின் ‘யோனோ’ (YONO) செயலி மூலம் 100% டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம். கிளைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
கட்டண விபரங்கள்:
செயலாக்கக் கட்டணம் (Processing Fee): கடன் தொகையில் 1.50% வரை வசூலிக்கப்படுகிறது (குறைந்தது ₹1000 முதல் அதிகபட்சம் ₹15,000 வரை + ஜிஎஸ்டி). சில நேரங்களில் பண்டிகைக் காலச் சலுகையாக இதற்கு விலக்கும் அளிக்கப்படுகிறது.
முன்கூட்டியே செலுத்துதல் (Prepayment): கடனை முன்கூட்டியே முடித்தால் 2% அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு முடித்தால் இந்தக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது.
யோனோ (YONO) செயலி மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
உங்கள் போனில் YONO SBI செயலியைத் திறந்து லாக்-இன் செய்யவும்.
மெனுவில் உள்ள ‘Loans’ பகுதிக்குச் சென்று ‘Personal Loan’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பான் (PAN) மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தகுதியைச் சரிபார்க்கவும்.
உங்களுக்குத் தேவையான கடன் தொகை மற்றும் கால அளவைத் தேர்வு செய்யவும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை உள்ளீடு செய்தால், அடுத்த சில நிமிடங்களில் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.