சென்னை: தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல், திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் திராவிடக் கட்சிகளின் கடந்த கால ஆட்சி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அமைச்சர் சேகர் பாபுவுக்கு கண்டனம்:
கன்னியாகுமரி கோவிலில் பக்தர்களை அமைச்சர் சேகர் பாபு ஒருமையில் பேசிய விவகாரம் குறித்துப் பேசிய சீமான், “அறநிலைத்துறை அமைச்சர் அறத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லாத வகையில் நடந்து கொள்கிறார். பக்தர்களிடம் அவர் ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது. எந்தக் காரணமாக இருந்தாலும், ஒரு மக்கள் பிரதிநிதி இவ்வளவு கோபப்பட வேண்டிய அவசியமில்லை. இது முற்றிலும் தவறு,” எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
மாற்று அரசியல்:
மாற்றம் என்பது திராவிடர்களை அகற்றுவதுதான்:
தமிழக அரசியலில் நிலவும் ‘மாற்றம்’ குறித்த விவாதங்களுக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளை மொத்தமாக அகற்றுவதுதான் உண்மையான மாற்றம். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்கின்றனர்.
இரண்டு ஆட்சிக் காலங்களிலும் லஞ்சம், ஊழல், பாலியல் புகார்கள், கொலைகள் மற்றும் இயற்கை வளச் சுரண்டல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. வார்த்தையில்தான் ‘மாற்றம்’ என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எதுவும் மாறப்போவதில்லை.
கொள்ளையடிப்பதில் தான் போட்டி:
திராவிடக் கட்சிகளின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சீமான், “திமுக, அதிமுக இரண்டுமே கூட்டுக் களவாளிகள் தான். அவர்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை என்றால், திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை. இரண்டு தரப்புமே சம அளவு அயோக்கியர்கள் தான். எவன் அதிகமாகத் திருடுவது, நாட்டை நாசமாக்குவது என்பதில் தான் இருவருக்கும் போட்டி நடக்கிறது,” எனச் சாடினார்.
பாஜக மற்றும் மாற்று அரசியல்:
பாஜகவின் வருகை குறித்துப் பேசிய அவர், “ஆயிரம் அமித்ஷாக்கள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் இங்கு எதையும் மாற்ற முடியாது. இந்தத் தீய சக்திகளுக்கு மாற்றாக ‘தூய சக்தி’ ஒன்று தேவை. அந்த மாற்றத்தைக் கொண்டு வர உண்மையாகப் போராடிக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற பிள்ளைகள் தான் தமிழகத்தின் அடுத்த கட்ட மாற்றமாக இருக்க முடியும்,” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.