latest news
உங்க வீட்ல வயசானவங்க இருக்காங்களா?.. அப்போ இத யூஸ் பண்ணிகோங்க!..
அஞ்சலகங்களில் மக்கள் பயன்பெறும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இத்திட்டங்களில் வரும் வட்டி வங்கிகளில் உள்ள வட்டியை விட சற்று அதிகம்தான். அதில் ஒன்றான திட்டம்தான் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்( senior citizen savings scheme). இத்திட்டத்தினை நாம் அஞ்சலகங்களிலோ அல்லது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலோ தொடங்கலாம். வயதானவர்களோ அல்லது ஓய்வு பெற்றவர்களோ தங்களின் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த தொகையை இப்படிபட்ட திட்டங்களில் முதலீடு செய்வது அவர்களுக்கு பின்னாளில் ஒரு நல்ல பயனை கொடுக்கும்.
இத்திட்டதிற்கென வயது வரம்புகள் உண்டு. சாதாரண குடிமக்கள் 60 வயது அல்லது 60 வயதை கடந்தவர்களாக இருந்தால் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்ற குடிமக்கள் 55 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு 8.2% வட்டியாக வழங்கப்படுகிறது. இக்கணக்கின் இருப்புகாலம் 5 வருடங்கள் ஆகும்.
இத்திட்டத்தி்ல் குறைந்தபட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாயும் தொகையாக நாம் முதலீடாக செலுத்தலாம். நாம் முதலீடு செய்யும் பணம் 1 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் நாம் பணமாக செலுத்தி கொள்ளலாம். 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் காசோலை மூலமாக பணம் செலுத்தி கொள்ளலாம்.
இக்கணக்கை தனியாகவோ அல்லது கூட்டு கணக்காகவோ கூட தொடங்கலாம். இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் இக்கணக்கை தொடங்க முடியாது.
1 வருடத்திற்கு பின் இக்கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெற நினைத்தால் 1.5% ரூபாய் அசலிலிருந்து கழிக்கப்படும். 2 ஆண்டுகளுக்கு பின் பணத்தை திரும்ப பெற நினைத்தால் 1% ரூபாய் அசலிலிருந்து கழிக்கப்படும். இத்திட்டத்தினால் நாம் ரூபாய் 1.5 லட்சம் வரை வரி விலக்கும் பெறலாம்.
இத்திட்டம் வயதானவர்களுக்கு என கொண்டுவரப்பட்ட திட்டம். உங்கள் வீட்டிலும் வயதானவர்கள் இருந்தால் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய செய்யலாம்.