Cricket
வருத்தப்பட்ட கம்பீர்.. உண்மையை உடைத்த பாக். அணி தேர்வுக்குழு உறுப்பினர்
பாகிஸ்தான் அணி தனது ஹோம் கிரவுண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஒட்டி பாகிஸ்தான் அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டன. அணியில் ஃபார்மில் இல்லாத பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டனர். இருவரின் நீக்கத்திற்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிலர் இருவரை நீக்கியிருக்கக் கூடாது என்றும், சிலர் நீக்கியது சரிதான் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழு உறுப்பினருமான ஆகிப் ஜாவெத் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் நடைபெற்ற உரையாடல் பற்றி மனம்திறந்து பேசியுள்ளார். அப்போது கூறிய அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலை பற்றி கம்பீர் தன்னிடம் பேசியதாக தெரிவித்தார்.
“இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது நாங்கள் இந்திய வீரர்களை சந்தித்தோம். கவுதம் கம்பீர் என்னிடம் பேசும் போது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு என்ன ஆனது, இத்தனை திறமைகள் இருந்த போதிலும், அவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்?”
“கம்பீர் இந்த நிலைப் பற்றி வருத்தம் தெரிவித்தார். பலம் வாய்ந்த சில அணிகள் உள்ளன. எனினும், இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் எப்போதும் மிகப்பெரிய பரபரப்பு மற்றும் பேசுபொருளை ஏற்படுத்தும். ஆனால் உங்கள் (பாகிஸ்தான்) அணி இப்படி வீழ்ந்தால், போட்டியின் போது ஏற்படும் உற்சாகம் குறைந்துவிடும்,” என்று கவுதம் கம்பீர் கூறியதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஆகிப் ஜாவெத் தெரிவித்தார்.