Cricket
இது அது-ல.. இந்திய பவுலர் சூப்பர்.. டைமிங்கில் விழுந்த விக்கெட்..!
இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குறிப்பிடத்தக்க விக்கெட் ஒன்றை இந்திய அணி பந்துவீச்சாளர் சாமர்த்தியமாக கைப்பற்றியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நியூசிலாந்து கேப்டன் சோஃபி டெவைன் தீப்தி வீசிய பந்தை அடிக்க கிரீஸை விட்டு வெளியே வந்தார். அவர் அடித்த பந்து தீப்தியிடமே வந்தது. உடனே பந்தை விக்கெட் கீப்பருக்கு வீசிய தீப்தி, டெவைன் கிரீஸில் இருந்து வெளியே இருந்ததை பார்த்து உடனே ஸ்டம்பிங் செய்து, விக்கெட் கோரினார். களத்தில் இருந்த அம்பயர்கள் முடிவை மூன்றாவது அம்பயரிடம் கேட்டனர்.
மூன்றாவது அம்பயர் சம்பவத்தை அதிநவீன கேமரா மூலம் உற்று நோக்கினார். இதில் டெவைன் கிரீஸை விட்டு வெளியே இருந்த போது ஸ்டம்பிங் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் டெவைன் அவுட் ஆகி வெளியேறினார். களத்தில் தீப்தி மற்றும் விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா சமயோசிதமாக செயல்பட்டதால் இந்திய அணிக்கு விக்கெட் கிடைத்தது.
போட்டியை பொருத்தவரை முதலில் பேட் செய்த இந்திய அணி 44.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ஐந்து பேட்டர்கள் 30-க்கும் அதிக ரன்களை சேர்த்தனர். எனினும், யாரும் அரைசதம் கடக்கவில்லை. இந்திய அணியில் அறிமுகமான தேஜல் ஹஸபின்ஸ் அதிகபட்சமாக 42 ரன்களை அடித்தார்.
எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஒருவர் கூட 50 ரன் பார்ட்னர்ஷிப் எடுக்கவில்லை. மேலும் 40.4 ஓவர்களில் நியூசிலாந்து அணி 168 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்திய முன்னாள் வீரர் எம்.எஸ். டோனி போட்டி ஒன்றில் இதே போன்று பேட்டர் கிரீஸை விட்டு வெளியே வருவதை பார்த்து ஸ்டம்பிங் செய்து, விக்கெட் எடுத்த சம்பவம் பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.