Cricket
IPL 2025: வலைவீசிய அணிகள், எகிறிய மவுசு.. சுப்மன் கில் எடுத்த முடிவு – யாரும் எதிர்பார்க்கல!
ஐ.பி.எல். 2025 தொடருக்கான அணிகள் தங்களது வீரர்கள் தக்க வைத்துக் கொள்வது தொடர்பான இறுதி அறிக்கையை நாளை மறுநாள் சமர்பிக்க வேண்டும். ஏற்கனவே எந்தெந்த அணிகள், யார் யாரை தங்களது அணியில் தக்க வைக்கும், எந்தெந்த வீரர்களை விடுவிக்கும் என்பது தொடர்பாக ஏராளமான தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் வெளியாகி இருக்கும் தகவல்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கேப்டன் சுப்மன் கில்-ஐ தக்கவைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
குஜராத் அணியில் சுப்மன் கில் தலைமையில் ரஷித் கான் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. சுப்மன் கில்-ஐ அணியில் தக்க வைப்பது மூலம் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வெல்ல தீர்மானம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களில், “ஐ.பி.எல். 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் தலைமை வகிப்பார், ரஷித் கான் அவர் தலைமையில் விளையாடுவார். பல்வேறு பெரிய அணிகள் சுப்மன் கில் ஏலத்திற்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு கொண்டுள்ள. எனினும், சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு உண்மையாக இருக்க விரும்புவதாகவும், வலுவான அணியை உருவாக்க விரும்புகிறார்,” என்று தெரிவிக்கப்பட்டது.
ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை விட்டு விலகிய பிறகு, சுப்மன் கில் அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இவர் தலைமையில் குஜராத் அணி கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஐ.பி.எல். தொடரில் களமிறங்கிய ஆண்டிலேயே கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த சீசனில் 12 அணிகள் அடங்கிய புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தையே பிடித்தது.
கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த அணியின் நெட் ரன் ரேட் கடந்த சீசனில் -1.063 ஆக இருந்தது. இவர் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 426 ரன்களை அடித்தார். இவரது சராசரி 38.73, ஸ்டிரைக் ரேட் 147.40 ஆக இருந்தது.