Cricket
கழட்டிவிட்ட மும்பை அணி.. 4 வார்த்தை, என்ன ப்ரித்வி ஷா இப்படி சொல்லிட்டாரு?
அதிரடி துவக்க வீரர் ப்ரித்வி ஷா வரவிருக்கும் ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை அணியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீப காலங்களில் மோசமான ஃபார்மில் இருக்கும் ப்ரித்வி ஷா தேவையற்ற ஒழுங்கீன செயல்களால் மகாராஷ்டிரா கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் தேர்வுக்குழுவை சீண்டியதாக கூறப்படுகிறது.
வலைபயிற்சி செஷன்களில் சரியாக கலந்து கொள்வதில்லை என்றும், அவுட் ஆன போதிலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதுதவிர அவரது ஃபிட்னஸ் அணி நிர்வாகத்திற்கு பிரச்சினையாக மாறியுள்ளதால், கடின முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நிர்வாகம் தள்ளப்பட்டதாக தெரிகிறது.
ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ப்ரித்வி ஷாவின் பெயர் அதில் இடம்பெறவில்லை. மும்பை கேப்டன் அஜிங்கியா ரஹானே, அணியில் ப்ரித்வி ஷா இருப்பதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அணியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் பேசு பொருளாகி இருக்கும் நிலையில், ப்ரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு பிரேக் தேவைப்பட்டது நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மூத்த தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள சஞ்சய் பாட்டில், ரவி தாக்கர், ஜிதெந்திர தாக்கரே, கிரன் போவர் மற்றும் விக்ராந்த் யெலிகெடி அணியை தேர்வு செய்துள்ளது. எனினும், ப்ரித்வி ஷா நீக்கப்பட்டதற்கு எந்த விளக்கமும் அறிக்கையில் இடம்பெறவில்லை.