Cricket
இந்திய தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ். லக்ஷமன்
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ். லக்ஷமன் செயல்படவுள்ளார். இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் இருப்பார் என்பதால், தென் ஆப்பிரிக்கா தொடரில் இந்திய அணிக்கு இடைக்கால தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ். செயல்படவுள்ளார்.
இது பற்றிய தகவலை பி.சி.சி.ஐ.-இன் உயரதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தி இருக்கிறார். நான்கு போட்டிகள் கொண்ட தொடர் முன்னதாக அட்டவணையிடப்படாமல் இருந்தது. சமீபத்தில் பி.சி.சி.ஐ. மற்றும் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தான் தொடருக்கான அட்டவணை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் நான்கு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் முறையே டர்பன், கிபெர்ஹா, சென்ச்சுரியன் மற்றும் ஜொகானஸ்பர்க் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. இவை முறையே நவம்பர் 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி நவம்பர் 4 ஆம் தேதி புறப்படுகிறது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான இந்திய அணி நவம்பர் 10-11 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணியாற்றி வரும் சாய்ராஜ் பாடுலெ, ரிஷிகேஷ் கானிட்கர் மற்றும் சுபாதீப் கோஷ் ஆகியோர் வி.வி.எஸ். லக்ஷமன் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியை பி.சி.சி.ஐ. கடந்த 25 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.