latest news
செல்வப் பெருந்தகை Vs ஈவிகேஎஸ் இளங்கோவன் – தமிழ்நாடு காங்கிரஸில் புது பிரச்னை!
கோஷ்டி பூசல்களும் உட்கட்சி வெடிப்புகளும்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடையாளமாக ஆதிகாலம் தொட்டு தொடரும் பாரம்பரியம். தலைவர்கள் முதல் கதர் கட்சி தொண்டர்கள் வரை இதை தமிழ்நாடு அரசியல் களம் ஆண்டாண்டு காலமாக கண்டு வருகிறது.
இந்த களத்தில் புதுவரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை – காங்கிரஸ் எம்.எல்.ஏவும் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இடையிலான உரசலைக் கைகாட்டுகிறார்கள் கதர் தொண்டர்கள். இதற்கான தொடக்கப் புள்ளி என்பது கடந்த சில வாரங்களுக்கு முன் செல்வப் பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்ன வார்த்தைகள்தான்.
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்வப் பெருந்தகை, `காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும். காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்’ என்றும் பேசியிருந்தார். இதற்கு அப்போதே பதிலடி கொடுத்திருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், `தமிழகத்தில் தற்போது நடப்பதே காமராஜர் ஆட்சிதான். முதல்வர் மு.க.ஸ்டாலின் காமராஜர் ஆட்சியைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்’ என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த உரசல் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. கூட்டத்தில் பேசிய செல்வப் பெருந்தகை, `நமது காங்கிரஸ் இயக்கத்துக்கு வரலாறு இருக்கிறது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நாம் இன்னொருவரை சார்ந்தே இருப்பது என்ற கேள்விக்கு உங்களிடம் விடை இருக்கிறதா?’ என்று பேசினார்.
செல்வப் பெருந்தகையின் இந்த பேச்சுக்கு அதே மேடையிலேயே ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்தது காங்கிரஸ் பொதுக்குழுவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பேசுகையில், `இன்றைக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தான் என்பதை மறந்து விடக்கூடாது..’ என்றும் `யாருக்குத் தான் இங்கே ஆசை இல்லை, வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இல்லாமலா இருக்கிறது? ஆனால், ஆசை பேராசை ஆகி விடக்கூடாது’ என்று பதிலடி கொடுத்ததைப் பற்றித்தான் கதர் தொண்டர்கள் தீவிர விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: உச்ச கட்ட உரசல்… பாஜக மேலிட ரேடாரில் அண்ணாமலை… பதவி தப்புமா?