latest news
சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறைவான நாட்கள் நடக்க என்ன காரணம்… சபாநாயகர் அப்பாவு சொன்ன காரணம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையைப் பொறுத்தவரை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் கூட்டத்தொடர் வழக்கமாக ஒரு மாதத்துக்கு மேல் நடப்பதுண்டு. ஆனால், இந்த முறை 9 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்தொடர் குறித்து தலைமைச் செயலகத்தில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, `தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கும். தினசரி காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும் அதைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடைபெறும் என்றும் அப்பாவு அறிவித்தார்.
வழக்கமாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெறும் நிலையில், குறைவான நாட்கள் நடைபெறுவது ஏன் என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அப்பாவு, `விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற இருப்பதால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. அப்போதே விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் நடத்தி முடித்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் செய்யாத தேர்தல் ஆணையத்திடம் இதைப் பற்றி கேள்வி எழுப்புவீர்களா?’ என்று கேட்டார்.
அதேபோல், காலை 10 மணிக்குப் பதில் 9.30 மணிக்கே கூட்டத்தொடர் தொடங்குவது பற்றி பேசிய அவர், `ஏற்கனவே கலைஞர் முதல்வராக இருந்தபோது 1996-லும், 2006-ம் ஆண்டிலும் காலை 9.30 மணிக்கே பேரவை கூட்டப்பட்டிருக்கிறது’ என்றும் விளக்கினார். இந்தநிலையில், `100 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்னவாயிற்று?’ என்று கேள்வி எழுப்பிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, இடைத்தேர்தலுக்குப் பிறகு கூட்டத்தொடரை தொடர்ந்து நடத்தலாம் என்கிற அதிமுகவின் கோரிக்கையையும் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விசாரிக்காதீங்க… இல்ல மறுபடியும் திருடுவேன்… நூதன முறையில் 128வது இளநீர் திருட்டு!…