tech news
அப்படி போடு.. விரைவில் அறிமுகமாகும் ஏசர் பிரான்ட் ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட் டிவி-க்களை தொடர்ந்து ஏசர் பிரான்ட் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்காக ஏசர் நிறுவனம் இன்ட்கல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. டிரேட்மார்க் லைசன்ஸ் தொடர்பாக இருநிறுவனங்கள் கூட்டணி அமைக்கின்றன.
இந்த கூட்டணி மூலம் இன்ட்கல் டெக்னாலஜிஸ் நிறஉவனம் ஏசர் பிரான்ட் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து, வினியோகம் செய்யும். இந்த ஆண்டு மத்தியில் ஏசர் பிரான்ட் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. எனினும், எப்போது இவை அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் ரூ. 15,000 துவங்கி அதிகபட்சம் ரூ. 50,000 வரையிலான விலைகளில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன. இதன் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உறுதியான இடத்தை பிடித்து, குறிப்பிடத்தக்க பங்குகளை ஈர்க்க முடியும் என்று ஏசர் பிரான்ட் நம்புகிறது. இந்த போன்களில் அதிநவீன அம்சங்கள் மற்றும் மேம்பட்ட மென்பொருள் வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஏசர் பிரான்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுதம் செய்வது தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதுகுறித்த இதர அறிவிப்புகள் ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு தயாரான பிறகு வெளியாக உள்ளது.
புதிய ஏசர் பிரான்ட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இவை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இருவிதங்களிலும் நடைபெறும் என்று தெரிகிறது.
முன்னதாக ஏசர் பிரான்ட் ஸ்மார்ட் டிவி மாடல்களையும் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இன்ட்கல் டெக்னாலஜிஸ் நிறுவனம் உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இன்ட்கல் நிறுவனம்தான் ஏசர் பிரான்ட் டிவிக்களை உற்பத்தி, வினியோகம் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவையை வழங்கி வருகிறது.