tech news
21% விலை உயர்வு: ஜியோவை தொடர்ந்து ஆப்பு வைக்கும் ஏர்டெல்
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் சலுகை விலையை உயர்த்துவதாக அறிவித்தது. ஜூலை 3 ஆம் தேதி விலை உயர்வு அமலுக்கு வர இருக்கிறது.
ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது ரீசார்ஜ் சலுகைகளின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் புதிய விலை ஜூலை 3 ஆம் தேதியே அமலுக்கு வரவுள்ளது. ஏர்டெல் நிறுவன ரீசார்ஜ் சலுகைகளின் விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதைய விலை உயர்வு மூலம் ஏர்டெல் நிறுவனம் ஒரு பயனரிடம் இருந்து பெறும் லாபத்தை ரூ. 300-க்கும் அதிகமாக பெற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஸ்பெக்ட்ரம் மற்றும் நெட்வொர்க் தொழில்நுட்பங்களில் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.
விலை உயர்வு காரணமாக ஏர்டெல் வருடாந்திர சலுகைகள் ரூ. 1,799 மற்றும் ரூ. 2,999 ஆகியவற்றின் விலை முறையே ரூ. 200 மற்றும் ரூ. 600 வரை அதிகரித்துள்ளது. அனைத்து பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
பிரீபெயிட் போன்றே போஸ்ட்பெயிட் சலுகைகளின் விலையும் உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு ஜூலை மாத பில்-இல் இருந்து அறிந்து கொள்ளலாம். 40GB டேட்டா மற்றும் எக்ஸ்டிரீம் சந்தா வழங்கும் ரூ. 399 சலுகையின் விலை ரூ. 449 ஆக அதிகரிக்கிறது. இதே போன்று ரூ. 449 விலையில் வழங்கப்பட்டு வரும் 75GB சலுகையின் விலை ரூ. 549 ஆக அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.