latest news
Mac வாங்கனுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஆப்பிள் Official அறிவிப்பு!
ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய Mac மாடல்கள் அடுத்த வாரம் முதல் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. புதிய சாதனத்தின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், iMac மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய M4 சிப்செட் வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
புதிய iMac மட்டுமின்றி MacBook Pro, Mac Mini போன்ற மாடல்களிலும் புதிய சிப்செட் வழங்கப்படலாம். கடந்த மாதம் தான் ஆப்பிள் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள், ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் தான் தற்போது புதிய Mac மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த விளம்பர பிரிவு துணை தலைவர் கிரெக் கோஸ்வியக் பகிர்ந்துள்ள எக்ஸ் தள பதிவில், “உங்கள் காலண்டர்களில் Mac? செய்து கொள்ளுங்கள். நாங்கள் சுவாரஸ்ய வாரத்தில் அறிவிப்புகளை வழங்க இருக்கிறோம், இவை வரும் திங்கள் கிழமை காலை முதல் துவங்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் ஐந்து நொடிகள் ஓடும் வீடியோ இணைக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த கோடை காலத்தில் தான் ஆப்பிள் நிறுவனம் அதிநவீன சிலிகான் சிப்செட் M4-ஐ அறிமுகம் செய்தது. இவை புதிய தலைமுறை iPad Pro மாடல்களில் வழங்கப்பட்டன. தற்போது இதே பிராசஸர் கொண்ட MacBook Pro மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த அறிவிப்பின் படி புதிய 14 மற்றும் 16 இன்ச் மாடல்களில் புதிய பிராசஸர் வழங்கப்பட உள்ளது. முன்னதாக புதிய பிராசஸர் கொண்ட MacBook Pro மாடல்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது.