tech news
ஐபோன் 16 வெளியீட்டு தேதி.. அப்டேட் கொடுத்த ஆப்பிள்..!
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் சீரிஸ்- ஐபோன் 16. 2024 ஆண்டுக்கான ஆப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிசாக ஐபோன் 16 சீரிசில் மொத்தம் நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. புதிய ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் பலமுறை லீக் ஆகி இருக்கின்றன.
அம்சங்கள், வெளியீடு, விற்பனை மற்றும் விலை ஏராளமான தகவல்கள் வெளியாகி வந்த போதிலும், ஆப்பிள் சார்பில் இதுகுறித்து எந்த தகவலும் வழங்கப்படாமல் தான் இருந்தது. தற்போது புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 09 ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக ஆப்பிள் வலைதளத்தில் உள்ள விவரங்களில் மிளிரும் ஆப்பிள் லோகோ இடம்பெற்றுள்ளது. கூடவே “It’s Glowtime” என்ற தலைப்பில் நடைபெறும் நிழ்ச்சியில் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆப்பிள் பார்க் வளாகத்தில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற இருக்கிறது.
இந்திய நேரப்படி செப்டம்பர் 09 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில் மக்கள் கலந்து கொள்ளலாம் என்று ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுதவிர நிகழ்ச்சியானது ஆன்லைனிலும் நேரலை செய்யப்படும்.
ஆப்பிள் நிறுவனத்தின் “It’s Glowtime” நிகழ்ச்சியில் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் மாடல்கள், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய சாதனங்கள் ஹார்டுவேர், டிசைன் மற்றும் மென்பொருள் என அனைத்து வகைகளிலும் அப்டேட் செய்யப்பட்டு, மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.