tech news
இந்தியா உள்பட 98 நாடுகள்.. ஐபோன் பயனர்களை எச்சரித்த ஆப்பிள்!
ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது கிடைக்கும் பாதுகாப்பான மாடல்களில் ஆப்பிள் நிறுவன ஐபோன்களை கூறலாம். பிரைவசி என்றாலே ஆப்பிள் தான் என்ற கருத்து தொழில்நுட்ப சந்தையில் பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் சமீப காலங்களில் சைபர் செக்யூரிட்டி தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆப்பிள் வெளியிட்ட எச்சரிக்கை தகவலில் ஐபோன் பயன்படுத்துவோர் ஸ்பைவேர் தாக்குதல் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு குறிப்பிட்டு இருந்தது. அப்போது, அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரை குறித்து தகவல் திருட்டு சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆப்பிள் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் இதே போன்ற எச்சரிக்கையை இந்தியா உள்பட உலகின் 98 நாடுகளில் ஐபோன் பயன்படுத்துவோருக்கு விடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற எச்சரிக்கையை உலகின் 150 நாடுகளுக்கு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஐபோன் வைத்திருப்போர் தகவல்களை அப்படியே திருடிக் கொள்ளும் புதுவித ஸ்பைவேர் குறித்து ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பலரும் தகவல் பதிவிட்டு வருகின்றனர். புது எச்சரிக்கைகளின் படி ஹேக்கர்கள் யார் என்பதே மர்மமாக இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஐபோன் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய தகவல்களில், “உங்களது ஆப்பிள் ஐடி மூலம் தகவல் திருட்டு சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன,” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த தாக்குதல்கள் வழக்கமான சைபர் தாக்குதல்களை விட அதிநவீனமானவை, இவை சிறிய எண்ணிக்கையில் தனி நபர்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன.
இவற்றுக்கான செலவீனங்கள் மிகவும் அதிகம் என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது. இந்த எச்சரிக்கையை பயனர்கள் மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.