latest news
இந்தியாவில் மேலும் மூன்று ஸ்டோர்களை திறக்க ஆப்பிள் முடிவு
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு சில்லறை விற்பனை மையங்களை இந்திய சந்தையில் திறந்தது. மும்பையின் பி.கே.சி. மற்றும் டெல்லி சக்கெட்டில் இவை அமைந்து இருக்கின்றன. முதற்கட்டமாக துவங்கப்பட்டு இருக்கும் ஆப்பிள் ஸ்டோர்களுக்கு வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பு அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்தியாவில் புதிதாக துவங்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர்களில் ரூ. 22 முதல் ரூ. 25 கோடி வரையிலான பில்லிங் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரு ஆப்பிள் ஸ்டோர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆப்பிள் ஸ்டோர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி புளூம்பர்கின் மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ஆப்பிள் நிறுவனம் சர்வதேச அளவில் விற்பனை மையங்களை திறப்பது, வேறு இடங்களுக்கு மாற்றுவது மற்றும் மறுசீரமைப்பு செய்வது என மொத்தம் 53 ஸ்டோர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இதில் 27 புதிய ஸ்டோர்களுடன் தனது சில்லறை விற்பனையை விரிவுப்படுத்த ஆப்பிள் முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய பசிபிக் பகுதிகளில் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை இருமடங்கு வரை அதிகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய சந்தையை பொருத்தவரை ஆப்பிள் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் புதிய ஸ்டோர்களை திறக்கும் என்று தெரிகிறது. இவை மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் அமையும் என்று கூறப்படுகிறது.
மேலும் புதிய ஸ்டோர்களுக்கான பகுதிகளை ஆப்பிள் ஏற்கனவே தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாவது ஆப்பிள் ஸ்டோர் மும்பையின் பொரிவாலியில் 2025 ஆம் ஆண்டு துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. நான்காவது ஆப்பிள் ஸ்டோர் டெல்லியின் டி.எல்.எஃப். ப்ரோமெனேட் மாலில் 2026 ஆம் ஆண்டு துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆப்பிள் பி.கே.சி.-யை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய ரிடெயில் ஸ்டோராக இது இருக்கும். இந்த வரிசையில் ஐந்தாவது ஸ்டோர் 2027 ஆம் ஆண்டு மும்பையின் வொர்லி பகுதியில் துவங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 2025 முதல் 2027 ஆண்டிற்குள் அடுத்தடுத்து மூன்று ஆப்பிள் ஸ்டோர்கள் துவங்கப்படும் என்று தெரிகிறது.