latest news
அவசர மருத்துவ செலவு, அரசு வழங்கும் ரூ. 5 லட்சம் – ஈசியா விண்ணப்பிக்க சூப்பர் டிப்ஸ்?
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தை விரிவுபடுத்தி, 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அவர்களது வருமானத்தை பொருட்படுத்தாமல் மருத்துவ காப்பீடு வசதியை வழங்க மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவப் பராமரிப்பு, மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு அதிக செலவாவதை கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்கள் தங்களின் நோய்ச் சுமையை நிர்வகிப்பது கடினமாக இருக்கும் என்பதால் இந்தியாவில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இந்தத் திட்டம் வருமானம் அடிப்படையிலும் தகுதியான குடும்பங்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ரூ. 5 லட்சம் வரையிலான வருடாந்திர காப்பீட்டை வழங்குகிறது. பொருளாதார ரீதியாக மக்கள் தொகையில் கீழ்மட்டத்தில் உள்ள 40 சதவீதத்தினர், அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் இந்த திட்டத்தில் ஏற்கனவே பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் நீட்டிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான வருடாந்திர காப்பீடு வழங்கப்படும். இந்த வயதிற்குட்பட்ட சுமார் 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த கூடுதலாக 6 கோடி பேர் இதன் மூலம் பயனடைவர்.
சேவை விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு PM-JAY இன் கீழ் புதிய அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி இருப்பதை அறிந்து கொள்வது, திட்டத்திற்கான அடையாள அட்டையை பெறுவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
முதலில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனடைய நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்களா என்பதை சரிபார்க்க வேண்டும். இதற்கு அரசின் “https://abdm.gov.in” என்ற வலைதளம் செல்ல வேண்டும்.
ஆதார் அல்லது ரேஷன் அட்டையை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் சரிபார்க்க முடியும்.
காப்பீடு பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளீர்களா என்பதை ரேஷன் அட்டை போன்ற ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டதும் உங்களுக்கான AB-PMJAY அடையாள எண் உருவாக்கப்படும். இந்த அடையாள எண் கொண்டு டிஜிட்டல் கார்ட்-ஐ ப்ரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.