tech news
மொத்தம் 278GB.. லீக் ஆன பயனர் விவரங்கள்.. சிக்கலில் பி.எஸ்.என்.எல்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பயனர் விவரங்கள் லீக் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயனரின் மிக முக்கிய விவரங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அரசு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-இன் சர்வெர்களை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால் பி.எஸ்.என்.எல். சிம் கார்டு விவரங்களை ஹேக்கர்கள் அபகரித்துள்ளதாக தெரிகிறது.
இதோடு பயனரின் லொகேஷன் பதியப்படும் விவரங்கள், சர்வெர் சார்ந்த மிகமுக்கிய கடவுசொற்கள் உள்ளிட்டவை ஹேக்கர் வசம் சென்றுள்ளது. களவு போன விவரங்களை கொண்டு ஹேக்கர்கள் சிம் கார்டு குளோனிங், அடையாள திருட்டு மற்றும் அபகரிப்பு உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ள அபாயம் அதிகம்.
முதற்கட்ட விசாரணையில் இந்த நாச வேலையில் கைபர்ஃபேண்டம் (Kiberphant0m) என்ற குழு தான் ஈடுபட்டது என தெரியவந்துள்ளது. இது சைபர் தாக்குதல் நடத்தியவரின் டார்க் வெப் முனையத்தில் யூசர்நேமாக இருக்கும் என்று தெரிகிறது. இதன் பின்னணியில் தனிபர் இருக்கிறாரா அல்லது குழுவாக இந்த நாச வேலை அரங்கேற்றப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பி.எஸ்.என்.எல். விவரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக டிஜிட்டல் ரிஸ்க் நிர்வாக நிறுவனமான அதெனியன் தெரிவித்தது. தற்போதைய தகவல்களின் படி பி.எஸ்.என்.எல். டெலிகாம் ஆபரேஷன்ஸ்-க்கு சொந்தமான 278GB டேட்டா களவு போனதாக கூறப்படுகிறது. ஹேக் செய்யப்பட்ட விவரங்களில் பயனர் விவரம் மட்டுமின்றி சர்வெர் தொடர்பான ஸ்னாப்ஷாட்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இதை கொண்டு இதேபோன்ற தாக்குதல்களை மீண்டும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். ஹேக் செய்யப்பட்ட தகவல்களில் சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாள (IMSI) எண்கள், சிம் கார்டு விவரங்கள், பின் கோடுகள், கடவுசொற்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இதில் பி.எஸ்.என்.எல்.-இன் SOLARIS சர்வெர்களின் ஸ்னாப்ஷாட்களும் இடம்பெற்றுள்ளது.
திருடப்பட்ட தகவல்களை ஹேக்கர் 5 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4.18 லட்சத்திற்கு விற்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதோடு விவரங்களை கையாண்டு சிம் குளோனிங் மற்றும் தகவல் திருட்டு உள்ளிட்டை நடவடிக்கைகளிலும் ஈடுபட போவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.