latest news
சாட்ஜி.பி.டி. மற்றும் இயர்பட்ஸ் உதவியுடன் காப்பியடித்த தேர்வர்கள் – வசமாக தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அதநவீன தொழில்நுட்ப சேவையாக உருவெடுத்து இருக்கும் ஏ.ஐ. டூல்கள் மெல்ல அதன் திறன்களை வெளிப்படுத்துவது, மக்களிடையே வரவேற்பையும், பெரும் பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. ஏ.ஐ. சார்ந்த சேவைகள் நன்மையை கடந்து, தீய செயல்களுக்கு பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துக் கொண்டே போவது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் பொது தேர்வில் சாட்ஜி.பி.டி. என்ற ஏ.ஐ. சாட்பாட் மற்றும் ப்ளூடூத் இயர்பட்ஸ் மூலம் காப்பியடித்த தேர்வர்கள் வசமாக சிக்கியுள்ளனர். இந்த அம்சம் தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. முன்னதாக தெலுங்கானா மாநில அரசு பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது தான், தெலுங்கானா அரசு பணியாளர்கள் தேர்வு வாரிய தேர்வில் கலந்து கொண்டவர்கள் சாட்ஜி.பி.டி. மற்றும் ப்ளூடூத் இயர்பட்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியது அம்பலமாகி இருக்கிறது. அரசு பணியாளர் தேர்வு வாரிய தேர்வின் வினாத்தாள் வெளியான வழக்கை சிறப்பு புலனாய்வு படையினர் விசாரித்து வருகின்றனர்.
புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில் துணை நிலை பொறியாளர் மற்றும் துணை கணக்கர் பதவிகளுக்கான தேர்வில் சாட்.ஜி.பி.டி. ஏ.ஐ. டூல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடையை ப்ளூடூத் இயர்பட்ஸ் மூலம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இத்தகைய அதிநவீன தொழில்நுட்பம் மூலம் தேர்வில் முறைகேடு செய்யப்பட்ட சம்பவம் நாட்டிலேயே முதல் முறையான ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பூலா ரமேஷ் என்ற நபரை சிறப்பு புலனாய்வு படையினர் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், தேர்வர்களுக்கு சாட்ஜி.பி.டி. மூலம் விடைகளை கண்டறிந்து, ப்ளூடூத் இயர்பட் மூலம் அவர்களுக்கு விடைகளை கூறும் திட்டத்தை தீட்டியதை பூலா ரமேஷ் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த திட்டத்தின் படி ஏழு தேர்வர்கள் இரண்டு பரீட்சையை சாட்ஜி.பி.டி. மற்றும் ப்ளூடூத் இயர்பட்ஸ் உதவியுடன் எழுதியது அம்பலமாகி இருக்கிறது.
விசாரணை வளையத்தில் உள்ள பூலா ரமேஷ், தேர்வு தொடங்கும் பத்து நிமிடங்களுக்கு முன் வினாத்தாளை கைப்பற்றி, சாட்ஜி.பி.டி. மூலம் கேள்விகளுக்கான விடையை பெற்றுள்ளார். பிறகு, வினாத்தாளை சுமார் 30-க்கும் அதிக தேர்வர்களுக்கு பூலா ரமேஷ் கொடுத்துள்ளார். இதற்காக ஒவ்வொருத்தரிடமும் இவர் ரூ. 25 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை பெற்று இருக்கிறார்.
ஜெனரேட்டிவ் ஏ.ஐ. டூல்கள் நாளுக்கு நாள் அதிக பிரபலம் அடைந்து வருவதோடு, இலவசமாகவே கிடைப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. சாட்ஜி.பி.டி. மற்றும் மைக்ரோசாஃப்ட் பிங் உள்ளிட்ட சேவைகள் செயலி வடிவிலேயே கிடைக்கின்றன. இதுபோன்ற சேவைகள் பெருமளவு பயன் அளிக்கும் பட்சத்திலும், இவற்றை தீயவர்கள் கையாளும் போது, இதன் பாதிப்பு தெரியவருகிறது.