latest news
பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப். தொகையை முன்கூட்டியே தனிப்பட்ட காரணங்களுக்காக எடுப்பவர்கள் இனி ரூ. 1 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அறிவித்து இருக்கிறது.
முன்னதாக ஊழியர்கள் தங்களது EPFO கணக்கில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக எடுத்துக் கொள்ளும் தொகை ரூ. 50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தத் தொகை இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இதுகுறித்து பேசும் போது, “EPFO பங்களிப்பாளராக இருப்பவர்கள், தங்களது குடும்பத்தில் ஏற்படும் அவசரநிலையை கருத்தில் கொண்டு முன்பை விட அதிக தொகையை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக ஒருமுறை எடுத்துக் கொள்ளும் பி.எஃப். தொகைக்கான வரம்பு உயர்த்தப்பட்டு இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
ஊழியர்கள் பி.எஃப். திட்டத்தில் பங்களிப்பாளராக இருக்கும் போது, ஒருமுறை பி.எஃப். திரும்பப் பெறப்படும். எனினும், சில வருங்கால வைப்பு நிதி திரும்பப் பெறுவதற்கான விதிகளில், தனிநபர் தனிப்பட்ட அவசர தேவைகளுக்கு பணத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கின்றன.
மேலும், புதிய பணியில் இணைந்த முதல் ஆறு மாதங்களுக்குள் பி.எஃப். பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ஏற்ப அரசு சட்டத்தை எளிமையாக்கியுள்ளது என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இது குறித்தும் பேசிய அவர், “முன்பு, நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, பி.எஃப். பங்களிப்பாளர்கள் வேலையில் இணைந்த முதல் ஆறு மாதங்களில் கூட பி.எஃப். பணத்தை திரும்பப் பெற முடியும். அது அவர்களின் பணம்,” என்று கூறினார்.