latest news
ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை இப்படியும் மாற்றலாம்.. அமேசான் அதிரடி அறிவிப்பு!
அமேசான் நிறுவனம் பயனர்கள் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வது பற்றிய அறிவிப்பை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது. ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளவோ அல்லது வங்கிகளில் செலுத்தவும் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றுவதில் சிரமமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இதன் காரணமாக அமேசான் வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பு மூலம் பயனர்கள் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும். அதன்படி பயனர்கள் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை கொண்டு தங்களது அமேசான் பே பேலன்ஸ்-ஐ டாப் அப் செய்து கொள்ளலாம்.
அமேசானில் கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை பயன்படுத்த முடியும். ஆர்டர்களுக்கு செலுத்தும் தொகையில் மீதிப் பணம் அமேசான் பே வாலெட்டில் சேர்க்கப்பட்டு விடும். ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை பயன்படுத்துவதற்கான உச்சவரம்பு மாதம் ரூ. 50 ஆயிரம் என்று அமேசான் நிர்ணயம் செய்துள்ளது.
அமேசான் பே வாலெட் மூலம் ரூ. 2 ஆயிரம் மாற்றுவது எப்படி ?
அமேசான் செயலியில் பயனர்கள் வீடியோ கே.வை.சி. (KYC)-யை முடிக்க வேண்டும்.
கே.வை.சி. வழிமுறை நிறைவுபெற்றதும், கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்ய வேண்டும்.
அடுத்து, ஆர்டர் டெலிவரி செய்யப்படும் போது, பொருளுக்கான பணத்தை ரூ. 2 ஆயிரம் ரொக்கமாக கொடுக்கலாம்.
இவ்வாறு பணம் செலுத்தும் போது, பயனர்கள் கொடுக்கும் ரொக்கத்திற்கான மீதித் தொகை அவர்களின் அமேசான் பே வாலெட்டில் உடனடியாக சேர்க்கப்பட்டு விடும்.
வழக்கம் போல அமேசான் பே வாலெட்டில் இருக்கும் தொகை கொண்டு பயனர்கள் இதர பொருட்களை வாங்கிட முடியும். மேலும் கியூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்தும் போது, நண்பர்கள், உறவினர்களுக்கு பணம் அனுப்பும் போது, ஸ்விக்கி, ஜொமேட்டோ போன்ற தளங்களில் பேமன்ட் செய்யும் போது, வாலெட்டில் இருக்கும் இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை இவ்வாறு மாற்றுவதற்கான வசதி கே.வை.சி.-யை நிறைவு செய்த பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றுவதற்கு கே.வை.சி. வழிமுறையை நிறைவு செய்திருப்பது அவசியம் ஆகும்.