latest news
Flood Insurance இருந்தா போதும், வெள்ளம் பாதித்தாலும் பிரச்சினையில்லை..!
இந்தியாவில் புயல், மழை, வெள்ளம் பாதிப்பு சமீப காலங்களில் கணிக்க முடியாத அளவுக்கும், எதிர்பாரா சமயங்களிலும் ஏற்படுகிறது. கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது சேமிப்பு, உடமைகள் மற்றும் வசிக்கம் வீடு என எல்லாமே பாதிப்புக்கு ஆளாகிறது.
சமீபத்தில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இதுதவிர அசாம், ஒடிசா, உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலக்கட்டத்தில் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுவது தொடர்கதையாத உள்ளது.
இந்த நிலையில், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு கைக் கொடுக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? வெள்ளம் தொடர்பான சேதங்களை மட்டும் உள்ளடக்கிய பிரத்யேக காப்பீடு திட்டங்கள் எதுவும் தற்போதைக்கு கொண்டுவரப்படவில்லை.
இருப்பினும், பரவலான காப்பீட்டு திட்டங்களில் வெள்ளப் பாதுகாப்பை ஈடு செய்யும் பலன் வழங்கப்படுகிறது. “ஸ்டாண்டர்ட் ஃபயர் & ஸ்பெஷல் பெரில்ஸ் பாலிசி மற்றும் ஹவுஸ்ஹோல்டர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசிட மூலம் வெள்ள பாதிப்புகளுக்கு காப்பீடு பெற முடியும் என ஃபின்ஹாட் இணை நிறுவனர் மற்றும் மூத்த நிதி அலுவலர் சந்தீப் கட்டியார் தெரிவித்தார்.
இதுபோன்ற காப்பீடு திட்டங்கள், “கலவரங்கள், வேலைநிறுத்தங்கள், வெள்ளம், புயல் மற்றும் சூறாவளி போன்ற பல்வேறு நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்கள், தீ மற்றும் ஆபத்து காப்பீடு வழங்குகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐஆர்டிஏஐ-இன் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட நிலையான வீட்டுக் காப்பீட்டு திட்டம் தான் பாரத் க்ரிஹா ரக்ஷா பாலிசி. இதை கொண்டு வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீட்டிற்கு காப்பீடு செய்து கொள்ளலாம். “இந்த திட்டம் பத்து ஆண்டுகள் வரை கவரேஜ் வழங்குகிறது. இந்த திட்டம் கட்டிடம் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் இரண்டிற்கும், கட்டிடத்தின் காப்பீடு செய்யப்பட்ட மதிப்பில் 20% வரை தன்னியக்க பாதுகாப்பை வழங்குகிறது.” என்று சோழ எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனர் சூர்யநாராயணன் தெரிவித்தார்.
இந்த வீட்டுக் காப்பீட்டுக் திட்டங்கள் வெள்ளம், புயல் மற்றும் சூறாவளிகளால் ஏற்படும் சேதங்கள் உள்பட பலவிதமான அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. அவை கட்டமைப்பு சேதத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், கனமழையால் கட்டிட பெயிண்டிங்கில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வண்ணம் தீட்டுதல் போன்ற கூடுதல் செலவுகளையும் ஈடுகட்டுகின்றன.
இடம், சொத்து வகை, கட்டிட வயது மற்றும் கட்டுமானப் பொருள் போன்ற காரணிகளின் அடிப்படையில் வீட்டு காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகையகள் மாறுபடும்.