tech news
அதிபுத்திசாலி ஏ.ஐ. உருவாக்கும் ஓபன்ஏ.ஐ. இணை நிறுவனர்
ஓபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை ஆய்வாளருமான இல்யா சட்ஸ்கீவர் புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். ஓபன்ஏ.ஐ. நிறுவனத்தில் இருந்து வெளியேறிய இல்யா சொந்தமாக துவங்கி இருக்கும் புதிய நிறுவனம் தான் சேஃப் சூப்பர்இன்டெலிஜென்ஸ் இன்க் (Safe Superintelligence Inc-SSI). இந்த நிறுவனம் பாதுகாப்பான ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஏ.ஐ. பிரிவு தலைவர் டேனியல் கிராஸ், ஓபன்ஏ.ஐ. முன்னாள் பொறியாளர் டேனியல் லெவி ஆகியோருடன் இணைந்து சட்ஸ்கீவர் துவங்கியுள்ளார். இவர்களின் நோக்கம், பாதுகாப்பான மற்றும் சக்திவாய்ந்த ஏ.ஐ. சிஸ்டத்தை உருவாக்குவது ஆகும்.
புதிய நிறுவனம் பற்றிய அறிவிப்பை இல்யா சட்ஸ்கீவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் புதிய நிறுவனம் ஒன்றை துவங்குகிறேன். நாங்கள் நேரடியாக ஒரே குறிக்கோள், ஒரே இலக்குடன் ஒற்றை சேவையில் கவனம் செலுத்த இருக்கிறோம். சிறு குழுவாக இணைந்து இந்த துறையில் புரட்சிகர எல்லைகளை படைப்போம், எங்களுடன் இணையுங்கள்,” என்று குறிப்பிட்டு தனது நிறுவனத்தின் வலைதள முகவரியை இணைத்துள்ளார்.
சூப்பர்இன்டெலிஜென்ஸ் இன்க் நிறுவனத்தின் அறிவிப்பில், பாதுகாப்பு முன்னிறுத்தி அதிநவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குறிக்கோள் காரணமாக எஸ்.எஸ்.ஐ. நிறுவனம் தற்போது முன்னணியில் உள்ள ஏ.ஐ. நிறுவனங்களான ஓபன்ஏ.ஐ., கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்டவை எதிர்கொண்டு வரும் புதுமை மற்றும் வணிகமயமாக்கல், நிர்வாக தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய சிக்கலை தவிர்க்க முடியும்.