Connect with us

latest news

மொபைல் போன்களில் இதை முதலில் கொடுங்க – உற்பத்தியாளர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு!

Published

on

Mobile fm Radio

மொபைல் போன்களில் இன்-பில்ட் எஃப்எம் ரேடியோ வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு கூட்டமைப்பு, தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்டவைகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக மொபைல் போன்களில் எஃப்எம் ரேடியோ அம்சம் வழங்குவது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருவதால் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு கிடைக்க வேண்டிய இலவச எஃப்எம் ரேடியோ வசதி மற்றும் அவசர காலம் மற்றும் பேரிடர் சமயங்களில் மத்திய அரசு மக்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்வது பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே மொபைல் போன்களில் எஃப்எம் ரேடியோ அம்சம் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Mobile fm Radio

Mobile fm Radio

இயற்கை பேரிடர் போன்ற காலக்கட்டங்களில் எஃப்எம் ரேடியோ தொழில்நுட்பம் மூலம் தகவல் பரிமாற்றம் வேகமாகவும், தங்குதடையின்றி மேற்கொள்ள முடியும். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்களிடையே எஃப்எம் ஸ்டேஷன்கள் தகவல் பரிமாற்றம் செய்யும் பாலமாக செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொது மக்களுக்கு இயற்கை பேரிடர் அல்லது அவசரகால எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்கிவிட முடியும். இதன் மூலம் உயிர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிவிடலாம்.

பொது மக்களுக்கு அவசர காலங்களில் மிகமுக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்ய மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்ற முறையாக ரேடியோ ஒலிபரப்பு விளங்குகிறது என்று சர்வதேச தொலைதொடர்பு யூனியன் பரிந்துரை வழங்கியுள்ளதை மேற்கோள் காட்டி மத்திய அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஃப்எம் வசதி கொண்ட மொபைல் போன்களை கொண்டு அதிவேகமாகவும், உரிய நேரத்திலும் நம்பத்தகுந்த தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்று மத்திய அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

Mobile fm Radio

Mobile fm Radio

மொபைல் போன்கள் மட்டுமின்றி வழக்கமான ரேடியோ செட்கள் மற்றும் கார்களில் உள்ள ரிசீவர்கள் மக்களின் உயிரை காப்பாற்றி, பேரிடர் போன்ற காலக்கட்டங்களில் தயார்நிலையில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டத்தை எதிர்த்து போரிட நாட்டின் மிகப்பெரிய எஃப்எம் டிரான்ஸ்மிட்டர் மற்றும் எஃப்எம் ரேடியோ நெட்வொர்க் அதிக பங்காற்றியது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எஃப்எம் ரேடியோ வழங்குவதோடு மட்டுமின்றி, ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் சாதனங்களில் எஃப்எம் ரேடியோ ரிசீவர் அல்லது இதனை இயக்கும் வசதியை செயல்படுத்தப்பட்ட நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது. தற்போது எஃப்எம் ரேடியோ வழங்கப்படாத சாதனங்களிலும் எஃப்எம் ரேடியோ ரிசீவரை வழங்க மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

google news