tech news
லூமியா ஸ்டைலில் புது போன் உருவாக்கும் HMD
HMD நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் களமிறங்கியது அனைவரும் அறிந்தது. நோக்கியா போன்களுடன், HMD பிராண்டிங்கிலும் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், HMD நிறுவனம் தனது இரண்டாவது ஸ்கைலைன் போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் HMD ஸ்கைலைன் G2 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. தோற்றத்தில் புதிய HMD ஸ்மார்ட்போன் நோக்கியா லூமியா சார்ந்த டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்கைலைன் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்குமா அல்லது முற்றிலும் புதிய மாடலாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
HMD ஸ்கைலைன் G2 மாடல் மூன்று சென்சார்களை கொண்ட கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இதில் எந்த மாதிரியான லென்ஸ்கள் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது புகைப்படம் எடுக்க விரும்புவோருக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை சுற்றி பக்கவாட்டில் இருக்கும் பெசல்கள் மிக மெல்லியதாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும், ஸ்மார்ட்போனின் மேல் மற்றும் கீழ்புற பெசல்கள் சற்று தடிமனாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
HMD முன்னதாக அறிமுகம் செய்த ஸ்கைலைன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருந்தது. எனினும், புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய புது தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.