tech news
இந்தியாவில் சரிந்த 5G வேகம்.. ஏன் தெரியுமா?
இந்தியாவில் 5ஜி டவுன்லோட் வேகம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளதாக ஓபன்சிக்னல் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 நான்காவது காலாண்டில் இந்தியாவில் 5ஜி டவுன்லோட் வேகம் 280.7Mbps ஆக குறைந்துள்ளது. முன்னதாக 2023 முதல் காலாண்டில் 5ஜி டவுன்லோட் வேகம் 304Mbps ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுக்க 5ஜி கனெக்டிவிட்டி அறிமுகத்தின் போது, புதிய தலைமுறை மொபைல் நெட்வொர்க் அதிவேக இணைய வசதியை உறுதிப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் 5ஜி டவுன்லோட் வேகம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் 5ஜி சேவையை பயன்படுத்துவோர் அதிகரித்து வருவதே, டவுன்லோட் வேகம் குறைய காரணம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 நான்காவது காலாண்டில் மட்டும் 5ஜி டேட்டா பயன்படுத்துவது 12.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் இந்தியர்கள் 6239 பீட்டா பைட் டேட்டா பயன்படுத்தி இருக்கின்றனர்.
2024 முதல் காலாண்டில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான காலக்கட்டத்தில் 5ஜி டவுன்லோட் வேகம் சரிந்துள்ளது. மாலை வேளைகளில் ஸ்டிரீமிங், கேமிங் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் என மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனாலேயே 5ஜி டவுன்லோட் வேகம் சரிந்துள்ளது.
இதேபோன்று 5ஜி சந்தாதாரர் எண்ணிக்கை 2023 நான்காவது காலாண்டில் 180 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 108 மில்லியன் 5ஜி பயனர்களுடன் ஜியோ முதலிடத்திலும், 72 மில்லியன் பயனர்களுடன் ஏர்டெல் இரண்டாவது இடத்திலும் உள்ளன. மொத்த மொபைல் டேட்டா பயன்பாட்டில் ஜியோ மட்டுமே 30 சதவீதத்தை நெருங்கி வருவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.