latest news
இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும் அறிந்தது தான். இந்த விஷயத்தில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், இந்தியாவில் ரூ. 10,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் ரூ. 10,000 நோட்டுக்கள் நாட்டில் புழக்கத்தில் இருந்தது. 1938 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி முதன் முதலில் ரூ. 10,000 நோட்டை புழக்கத்திற்கு விட்டது. அன்றைய காலக்கட்டத்தில் புழக்கத்தில் விடப்பட்ட மிகப்பெரிய ரூபாய் நோட்டாக அது இருந்தது.
ரூ. 10,000 நோட்டு வியாபாரிகள் மற்றும் வர்த்தகம் செய்வோர் அதிக தொகை கொண்ட பரிவர்த்தனைகளை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த நோட்டுக்களை ஏழை எளியோர் பலரும் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவு ஆகும். இந்த நோட்டுக்களை பெரிய அளவில் வியாபாரம் செய்து வந்த சிலர் மத்தியிலேயே புழக்கத்தில் இருந்தது.
எனினும், 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரிடிஷ் அரசாங்கம் ரூ. 10,000 நோட்டுக்களை மதிப்பிழக்க செய்து உத்தரவிட்டது. அன்றைய காலக்கட்டத்தில் கருப்பு பணம் அதிகளவில் புழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கையை அன்றைய பிரிடிஷ் அரசு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு 1954 ஆம் ஆண்டு ரூ. 10,000 நோட்டு மீண்டும் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. இத்துடன் ரூ. 5000 நோட்டும் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், 1978 ஆம் ஆண்டு இந்திய அரசு ரூ. 10,000 மற்றும் ரூ. 5000 நோட்டுக்களை மீண்டும் மதிப்பிழக்க செய்தது.