latest news
ஆன்லைனில் பார்ட்-டைம் வேலை: நபரிடம் ரூ. 1 கோடி சுருட்டிய மோசடி கும்பல்!
ஆன்லைனில் பகுதி நேர வேலை கொடுப்பதாக கூறி ஏராளமான மோசடி சம்பவங்கள் சமீப காலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாட்ஸ்அப், மெசேஞ்ச் மற்றும் அழைப்புகள் என்று ஏராள வழிகளில் மக்களை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல் பகுதி நேர வேலை கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தை களவாடி வருகிறது. அந்த வரிசையில் பகுதி நேர வேலை மோசடியில் ஏமாற்றப்பட்டவர்கள் பட்டியலில் 56 வயதான நபர் இணைந்திருக்கிறார்.
விளம்பர துறையில் பணியாற்றி வரும் பூனேவை சேர்ந்த நபர் பகுதி நேர வேலை கொடுப்பதாக தனக்கு வந்த குறுந்தகவலை நம்பி மோசடி கும்பலிடம் ரூ. 96 லட்சத்து 57 ஆயிரத்தை பறிக்கொடுத்திருக்கிறார். மொபைல் போனிலேயே பகுதி நேர வேலை கொடுப்பதாக இந்த நபருக்கு குறுந்தகவல் வந்திருக்கிறது. பின் இவரை மெசேஜிங் செயலியின் க்ரூப் ஒன்றில் சேர வலியுறுத்தி உள்ளனர்.
பகுதிநேர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இந்த நபர் அவர்கள் கூறியதை செய்திருக்கிறார். பின் இவரை நம்ப வைக்க மோசடி கும்பல் முதற்கட்டமாக ‘வெல்கம் போனஸ்’ என்ற பெயரில் ரூ. 10 ஆயிரம் அனுப்பியிருக்கிறது. இத்துடன் கார்ப்பரேட் பயண நிர்வாக நிறுவனங்களின் கவர்ச்சிகர சலுகைகளையும் சன்மானமாக வழங்கியது. இதன்பின் அதிக தொகை சம்பாதிக்க சில பிரீபெயிட் நடவடிக்கைகளை முடிக்குமாறு மோசடி கும்பல் வலியுறுத்தி இருக்கிறது.
இதை அடுத்த இந்த நபர் அதிக தொகை கொண்ட பரிவர்த்தனைகளை மேற்கொண்டு பலருக்கு பணம் அனுப்பியிருக்கிறார். தான் ஏமாற்றப்படுவதை அறியாமல், இந்த நபர் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரையிலான தொகையை அனுப்பிவிட்டார். முதலில் இவரிடம் ரூ. 21 ஆயிரத்து 990 தொகையை மோசடி கும்பல் அனுப்ப வைத்திருக்கிறது. பிரீபெயிட் பணிக்காக இவ்வாறு செய்ய வேண்டும் என்று அந்த கும்பல் தெரிவித்து இருக்கிறது.
இவ்வாறு செய்த பின் நபருக்கு ரூ. 24 ஆயிரத்து 809 திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து மோசடி கும்பல் இவரிடம் ரூ. 80 ஆயிரம் தொகையை அனுப்ப கூறியது. இதற்கான கட்டணங்கள் சேர்த்து ரூ. 94 ஆயிரத்து 840 தொகையை அனுப்ப வைத்தனர்.
இதோடு அந்த நபரிடம் ரூ. 1 லட்சம் அனுப்ப மோசடி கும்பல் வலியுறுத்தியுள்ளது. இதை அனுப்பிய நபர், தனது தொகைக்கான கமிஷனுடன் திருப்பித் தருமாறு கேட்டார்.
கமிஷன் தொகையை கேட்டதும், மோசடி கும்பல் இவரிடம் மீண்டும் பேசி ரூ. 35 லட்சத்து 25 ஆயிரம் தொகையை செலுத்த வலியுறுத்தியது. இவ்வாறு செய்தால், நபர் கொடுத்த தொகை முழுமையாகவும், கூடுதலாக அதிக கமிஷனை வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், இந்த நபருக்கு பணம் திரும்ப கிடைக்கவே இல்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் 25 முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மோசடி கும்பல் இவரிடம் இருந்து நூதன முறையில் பணத்தை அபகரித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சைபர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதோடு ஏமாற்றப்பட்ட நபரின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு சமயங்களில் பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகள் அனைத்தையும் முடக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.