latest news
மேட்டர் ஏரா எலெக்ட்ரிக் பைக் விலை திடீரென மாற்றம் – காரணம் என்ன தெரியுமா?
மேட்டர் நிறுவனத்தின் ஏரா சீரிஸ் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் – 5000 மற்றும் 5000 பிளஸ் விலை இந்திய சந்தையில் திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் ரூ. 30 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விலை உயர்வின் படி மேட்டர் ஏரா 5000 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 74 ஆயிரம் என்றும் மேட்டர் ஏரா 5000 பிளஸ் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 84 ஆயிரம் என்றும் மாறி இருக்கின்றன.
மேட்டர் ஏரா 5000 மற்றும் 5000 பிளஸ் என இரண்டு வேரியண்ட்களிலும் லிக்விட் கூல்டு, 5 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் திறன் 10.5 கிலோவாட் ஆகும். இதன் பேட்டரி எடை மட்டுமே 40 கிலோ ஆகும். இதன் ஒட்டுமொத்த எடை 180 கிலோ ஆகும்.
4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட முதல் எலெக்ட்ரிக் பைக் எனும் பெறுமையை மேட்டர் ஏரா மாடல் பெற்று இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் ஆறு நொடிகளுக்குள் எட்டிவிடும்.
மேட்டர் ஏரா மாடலில்- எலெக்ட்ரிக் பைக் ரேன்ஜ், ஸ்பீடு, ட்ரிப் மீட்டர், ஒடோமீட்டர், பேட்டரி லெவல், ரைடு மோட்கள், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்களை காண்பிக்க டி.எஃப்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கன்சோலில் நேவிகேஷன், கால்/மெசேஜ் அலர்ட்கள், ரைடிங் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் OTA, கீலெஸ் வசதி மற்றும் அளவில் சற்றே சிறிய ஸ்டோரேஜ் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங் ஹார்டுவேரை பொருத்தவரை ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் ABS/CBS வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 17-இன்ச் அளவில், ஸ்டைலிஷன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் போது மேட்டர் ஏரா 5000 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 999 என்றும் மேட்டர் ஏரா 5000 பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 53 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. விலை அறிவிப்பின் போதே, இது அறிமுக விலை தான் என்றும், எப்போது வேண்டுமானாலும் இந்த விலை மாற்றப்படலாம் என்றும் மேட்டர் நிறுவனம் தெரிவித்து இருந்தது.
அதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஃபேம் 2 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை ஜூன் மாதத்தில் இருந்து ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே மேட்டர் ஏரா 5000 சீரிஸ் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலையை உயர்வை கருத்தில் கொண்டு மேட்டர் நிறுவனம் ஜூன் 6 ஆம் தேதி வரை மேட்டர் ஏரா 5000 மற்றும் ஏரா 5000 பிளஸ் மாடல்களை முன்பதிவு செய்வோர், பழைய விலையிலேயே எலெக்ட்ரிக் பைக்கை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்து இருக்கிறது.
குறிப்பு: மேலே இடம்பெற்று இருக்கும் விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.