tech news
அதற்குள் 400 மில்லியன் பயனாளர்கள்.. மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் மெட்டா ஏஐ
மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவை- மெட்டா ஏஐ 400 மில்லியன் பயனர்களை பெற்றுள்ளதாக மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்து இருக்கிறார். தற்போது ஒவ்வொரு மாதமும் உலகம் முழுக்க 400 மில்லியனுக்கும் அதிகமானோர் மெட்டா ஏஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வாராந்திர அடிப்படையில் சரியாக 185 மில்லியன் பேர் சாட்பாட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக இந்த சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதை அடுத்து, மெட்டா ஏஐ பிரபலமாகி வருகிறது. இதன் காரணமாக ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி மற்றும் மைக்ரோசாப்ட் கோபைலட் உள்ளிட்டவைகளுக்கு மெட்டா ஏஐ கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்டா ஏஐ உலகின் அதிகம் பயன்படுத்தப்படும் ஏஐ அசிஸ்டண்ட் ஆக மாற்ற வேண்டும் என்று ஜூக்கர்பர்க் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். அந்த வகையில், தற்போது இந்த எண்ணிக்கை வெளியாகி இருப்பதைத் தொடர்ந்து ஆண்டு இறுதிக்குள் மார்க் ஜூக்கர்பர்க் கூறிய இலக்கை மெட்டா ஏஐ எட்டிவிடும் என்றே தெரிகிறது. தற்போது சாட்ஜிபிடி சேவையை ஒவ்வொரு வாரமும் சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் ஓபன் ஏஐ நிறுவனம் தனது ஏஐ சாட்பாட் சேவையை ஒவ்வொரு வாரமும் சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அறிவித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சாட்ஜிபிடி சேவையை உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் ஒவ்வொரு வாரமும் பயன்படுத்தி வந்தனர். தற்போது ஒரு வருட காலத்திற்குள் இந்த எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.
மெட்டா நிறுவனத்தின் சாட்பாட் சேவையான மெட்டா ஏஐ தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் என பல்வேறு செயலிகளில் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் எந்த செயலியை பயன்படுத்தினாலும், எளிதில் மெட்டா ஏஐ உதவியை நாட முடியும். இந்த செயலிகள் அனைத்தும் தினமும் 3 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.