tech news
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
உலகளவில் முன்னணி ஓடிடி தள சேவைகளில் ஒன்று நெட்ப்ளிக்ஸ் (Netflix). கடந்த ஆண்டு நெட்ப்ளிக்ஸ் வழங்கி வந்த குறைந்த விலை விளம்பரம்-இல்லா சலுகை திட்டத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் நீக்குவதாக அறிவித்தது.
இந்த விளம்பரம்-இல்லா குறைந்தவிலை சலுகை திட்டம் நெட்ப்ளிக்ஸ் வழங்கிவந்ததில் குறைந்த விலை சலுகை ஆகும். முன்னதாக இந்த சலுகை திட்டம் புதிய சந்தாதாரர்களுக்கு மட்டும் நீக்கப்பட்டது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே சேவையை பயன்படுத்தி வரும் சந்தாதாரர்களுக்கும் விளம்பரம்-இல்லா குறைந்த விலை சலுகை திட்டத்தை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
சலுகை திட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விளம்பரங்கள் அடங்கிய இலவச சலுகை திட்டத்தை அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது.
பயனர்கள் விளம்பரம் இன்றி நெட்ப்ளிக்ஸ் சேவையை பயன்படுத்த சற்றே விலை உயர்ந்த ஸ்டான்டர்டு அல்லது பிரீமியம் சலுகை திட்டங்களை ரீசார்ஜ் செய்யலாம். அமெரிக்காவில் ஸ்டான்டர்டு மற்றும் பிரீமியம் சலுகை திட்டங்களின் மாதாந்திர கட்டணம் முறையே 15.49 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1300 மற்றும் 22.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நெட்ப்ளிக்ஸ் அறிமுகம் செய்வதாக கூறப்படும் விளம்பரங்கள் அடங்கிய சலுகை திட்டம் இலவசமாக வழங்கப்படும் என்றும் இது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தொலைகாட்சி நெட்வொர்க்குகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.