tech news
புது பஞ்சாயத்து.. கதறும் ஒன்பிளஸ் பயனர்கள்.. போன் வாங்கினவங்க பாவம்..!
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் முன்னணி ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் மாடல்களாக விளங்குகின்றன. ஐபோனுக்கு அடுத்தப்படியாக ஆண்ட்ராய்டில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் பலர், ஒன்பிளஸ் வாடிக்கையாளராக இருக்கின்றனர்.
சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 12 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நார்டு 4 சீரிஸ் மாடல்கள் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டன. நார்டு சீரிஸ் மாடல்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருப்பதால், அதை வாங்குவோரும் இந்தியாவில் அதிகளவில் உள்ளனர்.
முன்னதாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் திரையில் பச்சை நிற கோடு ஏற்படுவதாக பயனர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்த ஒன்பிளஸ் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தீர்வு அளிப்பதாக உறுதியளித்தது. இந்த வரிசையில், தற்போது புதிய ஹார்டுவேர் பிரச்சினை காரணமாக ஒன்பிளஸ் பயனர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
அதன்படி ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கியவர்கள் தங்களது ஸ்மார்ட்போன் செயலற்று போனதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதே போன்று ஒன்பிளஸ் 9 ப்ரோ வாங்கியவர்களும் தங்களது மொபைல் வேலை செய்யாமல் போனதாக தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு ஒன்பிளஸ் 10 ப்ரோ பயன்படுத்தியவர் தனது மொபைல் தானாக ஆஃப் ஆகி மீண்டும் ஆன் ஆகவில்லை என்று ஒன்பிளஸ் சர்வீஸ் சென்டரை நாடியுள்ளார்.
போனை ஆய்வு செய்த ஒன்பிளஸ் டெக்னீஷியன்கள் ஸ்மார்ட்போனின் மதர்போர்டு பாழாகிவிட்டது என்றும் அதனை சரி செய்ய ரூ. 42,000 ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். மென்பொருள் மூலம் சரிசெய்யக்கூடிய பிரச்சினை இல்லை என்பதால், ஹார்டுவேர் ரீதியில் மதர்போர்டை மாற்றுவதற்கு அதிக (ரூ.42,000) செலவாகும் என்றும் வேண்டுமானால் இந்த கட்டணத்தில் பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்க முடியும் என்று சர்வீஸ் மைய அதிகாரி தெரிவித்ததாக ஒன்பிளஸ் பயனர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே போக்கோ மற்றும் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன்களில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், அவை மென்பொருள் ரீதியில் சரி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டன. சியோமி நிறுவனம் சாதனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு பதில் அளித்து, அதனை சரி செய்து கொடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.