tech news
ரூ. 29,999 விலையில் நார்டு 4 அறிமுகம் – என்னென்ன அம்சங்கள்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நார்டு 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இத்தாலியில் நடைபெற்ற விழாவில் புது நார்ட் 4 ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது.
புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனை பொருத்தவரை இதில் 6.74 இன்ச் 1.5K 2.8D Curved AMOLED ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அதிக தடிமனான கிராஃபைட் ஷீட் இது அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டு ஓஎஸ் அப்டேட்கள், ஆறு ஆண்டுகள் வரை செக்யுரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. இதுவரை வெளியான எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிற்கும் இத்தனை ஆண்டுகள் அப்டேட் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்தது இல்லை.
புகைப்படங்களை எடுக்க இதில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நார்டு 4 ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5500mAh பேட்டரி, 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட்போன் மெர்குரியல் சில்வர், அப்சிடியன் மிட்நைட் மற்றும் ஓயாசிஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 29,999 என்றும் 8GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 32,999 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 35,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், ஆஃப்லைன் ஸ்டோர் உள்ளிட்டவைகளில் ஜூலை 20 ஆம் தேதி துவங்குகிறது.