tech news
மீண்டும் மீண்டுமா..? சத்தமில்லாம விலையை உயர்த்திய ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. இந்த முறை நெட்ப்ளிக்ஸ் சந்தாவுடன் கிடைக்கும் பிரீபெயிட் ரீசார்ஜ்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் ரீசார்ஜ்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியது.
உயர்த்தப்பட்ட விலை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. ஜியோ வரிசையில் வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை உயர்த்தின. தற்போது ரிலையன்ஸ் ஜியோ உயர்த்தி இருக்கும் பிரீபெயிட் ரீசார்ஜ்களுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.
மேலும் இவை 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இலவச நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கி வரும் ஜியோ ரீசார்ஜ்களின் விலை தற்போது ரூ. 1,299 மற்றும் ரூ. 1,799 என மாறி இருக்கின்றன. முன்னதாக இவற்றின் விலை முறையே ரூ. 1,099 மற்றும் ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் ரூ. 1,299 விலை கொண்ட பிரீபெயிட் ரீசார்ஜில் நெட்ப்ளிக்ஸ் மொபைல் சந்தாவும் ரூ. 1,799 ரீசார்ஜ் செய்யும் போது நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. நெட்ப்ளிக்ஸ் மொபைல் திட்டத்தில் பயனர்கள் சேவையை ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற சாதனங்களில் ஒரு சமயத்தில் ஒரு சாதனத்தில் மட்டும் பயன்படுத்தலாம்.
இந்த சந்தாவில் பயனர்கள் அதிகபட்சம் 480 பிக்சல் தரத்தில் வீடியோ ஸ்டிரீமிங் செய்து கொள்ளலாம். நெட்ப்ளிக்ஸ் பேசிக் திட்டத்தில் பயனர்கள் போன், டேப்லெட், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் என எந்த சாதனத்திலும் ஸ்டிரீமிங் செய்து கொள்ளலாம். மேலும் இதில் வீடியோ ரெசல்யூஷன் 720 பிக்சல்களில் கிடைக்கும்.