latest news
சாம்சங் அசத்தல் அம்சம்.. Color Blind பயனர்களும் திரையை தெளிவாக பார்க்க முடியும்!
சாம்சங் நிறுவனம் தனது 2023 ஸ்மார்ட் டிவி மற்றும் மானிட்டர் மாடல்களில் சீகலர்ஸ் மோட் (Seecolors Mode) அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய அக்சஸபிலிட்டி அம்சம் 2017 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த அம்சம் தான் 2023 சாம்சங் டிவி மற்றும் மானிட்டர் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது.
புதிய அறிவிப்பின் படி சாம்சங் நியோ QLED, QLED, OLED, ஸ்மார்ட் மானிட்டர் மற்றும் G95SSC கேமிங் மானிட்டர் போன்ற மாடல்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்த வலைதள பதிவில், புதிய அம்சம் பார்வை நிற குறைபாட்டின் பல்வேறு வகைகளுக்கு ஏற்ப செட்டிங்களை மாற்றி பயனர்களுக்கு அசத்தலான அனுபவத்தை வழங்கும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சீகலர்ஸ் மோட் அம்சம் எந்த விதமான நோய், குறைபாடு உள்ளிட்டவைகளை கண்டறியவோ அவ்வற்றை சரி செய்யவோ அல்லது சிகிச்சை அளிக்கவோ செய்யாது என்று சாம்சங் விளக்கம் அளித்துள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்களுக்கு வழங்கப்படும் விவரங்களை, மருத்துவ அறிவுரையாக கருத வேண்டாம் என்றும் சாம்சங் தெரிவித்து உள்ளது.
இந்த அம்சம் எப்படி இயங்கும் ?
சாம்சங் அறிவித்து இருக்கும் சீகலர்ஸ் மோட் பயனர்கள் தேர்வு செய்வதற்கு ஒன்பது பிக்சர் பிரீசெட்களை வழங்கும். இவை பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ரெட், கிரீன் மற்றும் புளூ லெவல்களை அட்ஜஸ்ட் செய்து, பயனர்களின் பார்வை நிற குறைபாடு வகை, டிகிரிக்கு ஏற்ப பல்வேறு நிறங்கள் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க செய்யும்.
2023 மாடல்களுக்கு வழங்கப்படும் மென்பொருள் அப்டேட் சீகலர்ஸ் மோட்-ஐ டிவி-யின் அக்சஸபிலிட்டி மெனுவில் சேர்த்துவிடும். பார்வை நிற குறைபாடு கொண்ட பயனர்களுக்கு சிறப்பான காட்சி அனுபவத்தை சாம்சங் ஸ்கிரீன்களின் மூலம் வழங்குவதற்காக, டியுவி ரெயின்லேன்ட் சார்பில் சாம்சங் நிறுவனத்திற்கு ‘கலர் விஷன் அக்சஸபிலிட்டி’ சான்று வழங்கப்பட்டு உள்ளது.
இந்த அங்கீகாரம் கொண்டு, சாம்சங் அக்சஸபிலிட்டி பிரிவில் எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதை உணர முடிகிறது.
“பார்வை நிற குறைபாடு மற்றும் பார்வை குறைபாடு கொண்ட பயனர்களுக்காக 2023 டிவி மற்றும் மானிட்டர் மாடல்களில் சீகலர்ஸ் (SeeColors) மற்றும் ரெலுமினோ (Relumino) மோட் என கூடுதல் அக்சஸபிலிட்டி அம்சங்களை அறிமுகம் செய்வது சுவார்ஸ்யமாக உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. எங்களின் Screens Everywhere, Screens For All குறிக்கோளுக்கு இனங்கும் வகையில், தொடர்ந்து புதுமை மற்றும் பயனுள்ள தொழில்நுட்பங்களை எங்களின் பயனர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிப்போம்,” என்று சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விஷூவல் டிஸ்ப்ளே பிரிவு நிர்வாக துணை தலைவர் சீக்வோ ஜேசன் யாங் தெரிவித்து இருக்கிறார்.