latest news
இனி சீரியல் ஷூட்டிங் வேற லெவலில் மாறிடும்.. சாம்சங்கின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!
திரைப்படங்களில் விஷூவல் எஃபெக்ட்ஸ் எனப்படும் கணினியியல் காட்சிகள் எப்படி உருவாக்கப்படும் என்று தெரியுமா? கடந்த காலங்களில் திரைப்பட காட்சிகளில் கணினி காட்சிகள் சேர்க்கும் பணிகள் படப்பிடிப்புக்கு பின்பே மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனினும், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, படப்பிடிப்பின் போதே, அச்சு அசலாக உண்மை போன்றே காட்சியளிக்கும் படங்கள் பேக்கிரவுண்டில் தெரியும் படி காண்பிக்கப்படுகின்றன.
இந்த தொழில்நுட்பம் விர்ச்சுவல் ப்ரோடக்ஷன் என்று அழைக்கப்படுகிறது. முதன் முதலில் டிஸ்னி பிளஸ் சீரிஸ்- தி மான்டலோரியன் படப்பிடிப்பில் விர்ச்சுவல் ப்ரோடக்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. சமீபத்தில் தான் சாம்சங் நிறுவனம், “தி வால் ஃபார் விர்ச்சுவல் ப்ரோடக்ஷன்” பெயரில் புதிய டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்தது. இந்த டிஸ்ப்ளே, விர்ச்சுவல் ப்ரோடக்ஷன் ஸ்டூடியோக்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
சாம்சங்கின், தி வால் ஃபார் விர்ச்சுவல் ப்ரோடக்ஷன் டிஸ்ப்ளே கொண்டு திரைப்படம் அல்லது தொடர்களின் படப்பிடிப்புகளின் போது காட்சியின் பின்னணியில் தோன்ற வேண்டிய பேக்கிரவுன்டை கணினி கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கி அவற்றை டிஸ்ப்ளேவில் ஓட செய்ய முடியும். இவ்வாறு செய்யும் போது படப்பிடிப்பின் போது இயக்குனர் எதிர்பார்க்கும் காட்சி முழுமையாக படமாக்கப்பட்டு விடும். இதன் மூலம் படப்பிடிப்புக்கு பின் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மேற்கொள்ள தனியாக நேரமும், பணமும் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த தொழில்நுட்பம் முந்தைய படப்பிடிப்பு முறைகளான செட் உருவாக்குவது, கிரீன் ஸ்கிரீன் பயன்படுத்துவது உள்ளிட்டவைகளை தவிர்க்க செய்யும். தி வால் ஃபார் விர்ச்சுவல் ப்ரோடக்ஷனில் மாட்யுலர் எல்இடி டிஸ்ப்ளே உள்ளது. இதனை எந்த விதமான வடிவம் மற்றும் அளவுக்கு வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ள முடியும். இது அதிக ரிப்ரெஷ் ரேட் மற்றும் வைடு வியூவிங் ஆங்கில் கொண்டிருக்கிறது.
இந்த டிஸ்ப்ளேவில் பில்ட்-இன் கேமரா உள்ளது. இதை கொண்டு நடிகர்களின் அசைவுகளை டிராக் செய்ய முடியும். சாம்சங் நிறுவனம் தனது புதிய, தி வால் ஃபார் விர்ச்சுவல் ப்ரோடக்ஷன் டிஸ்ப்ளேவுக்கான செயலிகளை உருவாக்க லக்ஸ் மெஷினா, வீட்டா எஃப்.எக்ஸ். போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. லக்ஸ் மெஷினா என்பது, விஷூவல் எஃபெக்ட்ஸ் நிறுவனம் ஆகும்.
லக்ஸ் மெஷினா நிறுவனம் தான் தி மான்டலோரியன் மற்றும் ஹவுஸ் ஆஃப் தி டிராகன் போன்ற திரைப்படம் மற்றும் தொடர்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியது. வீட்டா எஃப்.எக்ஸ். நியூசிலாந்தை சேர்ந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ் டிரைலஜி மற்றும் அவதார் போன்ற திரைப்படங்களை உருவாக்க பணியாற்றியது.