latest news
வாட்ஸ்அப்-இல் உலா வரும் புதிய அபாயம் – சிக்காமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க!
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் பயனர் பணத்தை அபகரிக்கும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த முறை மிகவும் வித்தியாசமான முறையில் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகளை மேற்கொண்டு, பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி வருகின்றனர். பகுதி நேர வேலை விஷயத்தில் இந்தியர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியும் என்று நினைத்து இதுபோன்ற செயல்களில் மோசடி பேர்வழிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடியில் சிக்குவோர் எளிதில் பல லட்சங்களை இழந்துவிடுகின்றனர்.
கடந்த சில வாரங்களாக முன்பின் அறிமுகம் இல்லாத சர்வதேச எண்களில் இருந்து பயனர்களுக்கு அதிகளவில் அழைப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் சர்வதேச எண்களில் இருந்து தேவையற்ற அழைப்புகள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டு இருப்பதாக பயனர்கள் தங்களது டுவிட்டர் மற்றும் இதர சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது போன்று அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் ஹேக்கர்கள், பயனர்களை நூதன முறையில் ஏமாற்றி அவர்களின் பணத்தை எளிதில் பெற்றுக் கொள்கின்றனர்.
அந்த வகையில், உங்களுக்கும் இதுபோன்ற அழைப்புகள் வரும் பட்சத்தில் நீங்கள் உடனே செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஏற்க வேண்டாம்:
அறிமுகம் இல்லாத சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இதனை ஏற்காமல் தவிர்த்து விடுவது நல்லது. அழைப்பை ஏற்கும் பட்சத்தில் நீங்கள் ஏமாற்றப்படும் வாய்ப்புகள் அதிகம்.
பதில் அளிக்க வேண்டாம்:
நிதி சார்ந்த பலன்களை வழங்குவதாகவும், பரிசு அல்லது லாட்டரியில் நீங்கள் வென்று இருப்பதாக கூறியும் சர்வதேச எண்களில் இருந்து உங்களுக்கு குறுந்தகவல்கள் வரலாம். இதுபோன்ற குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். இவ்வாறான குறுந்தகவல் பற்றி வாட்ஸ்அப்-க்கு விரைந்து தகவல் கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
பிலாக் செய்ய வேண்டும்:
குறிப்பிட்ட சர்வதேச எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வரும் பட்சத்தில், அந்த நம்பரை பிலாக் செய்வது நல்லது. கால் லாக் (call log) சென்று குறிப்பிட்ட நம்பரை அழுத்தி பிடித்து பிலாக் நம்பர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
ரிபோர்ட் செய்ய வேண்டும்:
சர்வதேச எண் ஊழல் செய்பவராக இருக்கும் என்று நினைத்தால் அது பற்றி வாட்ஸ்அப்-இல் ரிபோர்ட் செய்யலாம். இதை செய்ய கால் லாக்-இல் குறிப்பிட்ட நம்பரை க்ளிக் செய்து நம்பரை ரிபோர்ட் செய்யக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப் மற்றும் இதர குறுந்தகவல் செயலியை பயன்படுத்தும் போது மிகவும் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும். குறிப்பாக அறிமுகம் இல்லாத சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களிடம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை கொண்டு ஊழல் மற்றும் இதர மோசடிகளில் சிக்காமல் உங்களை தற்காத்து கொள்ளலாம்.