Connect with us

automobile

மே 2023 விற்பனை – ஹைகிராஸ்-ஐ முந்திய இன்னோவா க்ரிஸ்டா!

Published

on

Toyota-Innova-Crysta

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக டொயோட்டா கிளான்சா வளர்ந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் கிளான்சா மாடல் விற்பனை மட்டும் வருடாந்திர அடிப்படையில் 75 சதவீதமும், மாதாந்திர அடிப்படையில் 42 சதவீதமும் அதிகரித்து வருவது, மே 2023 விற்பனையில் தெரியவந்துள்ளது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த மே மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களை தொடர்ந்து ஐந்தாவது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக டொயோட்டா உள்ளது. ஏப்ரல் 2023 மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மாதம் டொயோட்டா நிறுவன வாகனங்கள் விற்பனை 90 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

2023 ஏப்ரல் மாதம் டொயோட்டா நிறுவனம் 10 ஆயிரத்து 216 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், மே மாதம் மட்டும் விற்பனை 19 ஆயிரத்து 379 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதன் மாதாந்திர விற்பனை 37 சதவீதம் அதிகரித்துள்ளது. வெல்ஃபயர் தவிர டொயோட்டா நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் வருடாந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

Toyota-Innova-Hycross

Toyota-Innova-Hycross

இதன் காரணமாக டொயோட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பு மே மாதத்தில் மட்டும் 5.8 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் டொயோட்டா நிறுவன சந்தை பங்குகள் 3.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் வருடாந்திர அடிப்படையிலான சந்தை பங்குகள் மற்ற ஆட்டோமொபைல் விற்பனை செய்யும் நிறுவனங்களை விட அதிகரித்து இருக்கிறது.

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் கிளான்சா, அர்பன் குரூயிசர் ஹைரைடர், இன்னோவா க்ரிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ், ஹிலக்ஸ், ஃபார்ச்சூனர், கேம்ரி மற்றும் வெல்ஃபயர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்களில் டொயோட்டா கிளான்சா அதிக யூனிட்கள் விற்பனையாகி முன்னணி மாடலாக உள்ளது.

இதைத் தொடர்ந்து இன்னோவா க்ரிஸ்டா மாடல் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இந்த மாடல் வருடாந்திர அடிப்படையில் 75 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. டீசன் மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்னோவா க்ரிஸ்டா மாடல் விற்பனையில் இத்தகைய வரவேற்பை பெற்று இருக்கிறது.

மே 2023 மாத நிலவரப்படி, டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் டொயோட்டா ஹைரைடர் மாடல் மூன்றாவது இடம்பிடித்து அசத்தி இருக்கிறது. இந்த காரின் மாதாந்திர வளர்ச்சி 18 சதவீதமாக பதிவாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இன்னோவா ஹைகிராஸ் மாடல் நான்காவது இடத்தில் உள்ளது.

சமீபத்தில் தான் டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் (ஹைப்ரிட்), கிளான்சா மற்றும் கேம்ரி உள்ளிட்ட மாடல்களின் விலையை அதன் வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 27 ஆயிரத்தில் இருந்து ரூ. 46 ஆயிரம் வரை உயர்த்தியது. இதோடு ஹைகிராஸ் மாடலின் ZX மற்றும் ZX(O) வேரியண்ட்களின் முன்பதிவு அமோக வரவேற்பு காரணமாக நிறுத்தப்பட்டது.

google news