latest news
இனி குழப்பம் வேண்டாம் – ஆதாரில் அறிமுகம் செய்யப்பட்ட வேறலெவல் அம்சம் – எதற்கு தெரியுமா?
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) நெட்டிசன்கள் தங்களது ஆதார் எண்ணுடன் இணைத்திருக்கும் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்திக் கொள்ள ஏதுவாக புதிய வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வசதி பல லட்சம் இந்தியர்களுக்கு மிகவும் பயன்தரும் அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. இது பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
யு.ஐ.டி.ஏ.ஐ. சார்பில் வழங்கப்பட்டு இருக்கும் சமீபத்திய அப்டேட் மூலம், இந்தியர்கள் தங்களின் ஆதார் எண்ணுடன் எந்த மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை லின்க் செய்திருக்கிறோம் என்று அடிக்கடி குழம்பிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. புதிய வசதியின் மூலம் பயனர்கள் மிக எளிமையாக தங்களின் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அப்டேட் செய்து கொள்ளலாம். எனினும், இவ்வாறு செய்ய பயனர்கள் அருகாமையில் உள்ள ஆதார் மையத்திற்கு செல்வது அவசியம் ஆகும்.
புதிய வசதி குறித்து கூறும் போது, “தங்களின் ஆதார் ஒடிபி வேறு ஏதோ மொபைல் நம்பருக்கு செல்வதாக பயனர்கள் வருந்தினர். தற்போது, புதிய அம்சம் மூலம் பயனர்கள் இதனை மிக எளிமையாக அறிந்து கொள்ள முடியும்,” என்று யு.ஐ.டி.ஏ.ஐ. வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த அம்சத்தினை யு.ஐ.டி.ஏ.ஐ. அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது எம்ஆதார் செயலியில் இயக்க முடியும்.
யு.ஐ.டி.ஏ.ஐ. வலைதளம் மற்றும் எம்ஆதார் செயலியில் “வெரிஃபை இமெயில் / மொபைல் நம்பர்” (Verify email/ mobile Number) அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும். இதை கொண்டு பயனர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் எந்த மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரி இணைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆதாரில் இணைக்கப்பட்டு இருக்கும் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்ப்பது எப்படி?
கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருக்கும் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
– யு.ஐ.டி.ஏ.ஐ. வலைதளத்திற்கு சென்று அல்லது ஆண்ட்ராய்டு / ஐஒஎஸ் எம்ஆதார் செயலியை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
– வலைதளம் அல்லது செயலியில் “வெரிஃபை இமெயில் / மொபைல் நம்பர்” (Verify email/ mobile Number) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
– உங்களது ஆதார் நம்பர், மொபைல் நம்பர் / மின்னஞ்சல் முகவரி மற்றும் CAPTCHA உள்ளிட்ட விவரங்களை அதற்கான இடங்களில் பதிவிட்டு பின் “செண்ட் ஒடிபி” (Send OTP) எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
– ஒருவேளை உங்களது மொபைல் நம்பர் வெரிஃபை செய்யப்பட்டு இருந்தால் திரையில், ‘உங்களது மொபைல் நம்பர் ஏற்கனவே எங்களின் தரவுகளோடு உறுதிப்படுத்தப்பட்டு விட்டது’ என்ற தகவல் தெரியும். இதே போன்ற தகவல் உங்களது இமெயில் முகவரியை உறுதிப்படுத்தும் போதும் பார்க்க முடியும்.
ஆதாரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் கொண்டு இந்தியர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் எந்த மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரி இணைக்கப்பட்டுள்ளது என்பதை எவ்வித குழப்பமும் இன்றி எளிமையாக அறிந்து கொள்ள முடியும். ஒருவேளை மொபைல் நம்பர் அல்லது மின்னஞ்சல் முகவரியை அப்டேட் செய்ய வேண்டுமெனில் அதற்கான தகவல்களும் ஆதார் வலைதளம் அல்லது எம்ஆதார் செயலியில் இடம்பெற்று இருக்கிறது.