tech news
ஒரே நேரத்தில் 32 பேர், அசத்தும் புது வாட்ஸ்அப் அப்டேட்
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப். பல கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் அவ்வப்போது புதுப்புது அம்சங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
புதிய அம்சங்களை நேரடியாக செயலியில் வழங்குவதற்கு முன் அதனை செயலியின் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்வதை தொழில்நுட்ப நிறுவனங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இதே பாணியை வாட்ஸ்அப் நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது.
அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் டெஸ்டிங் செய்யப்பட்ட சில அம்சங்கள் அப்டேட் வழியாக வழங்கப்படுகிறது. இதற்கான புது அப்டேட்டில் ஆடியோவுடன் ஸ்கிரீன் ஷேரிங் வசதி மற்றும் வீடியோ கால் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி வீடியோ கால் மேற்கொள்ளும் போது இனி 32 பேருடன் ஒரே சமயத்தில் பேச முடியும். இத்துடன் ஸ்பீக்கர் ஸ்பாட் லைட் எனும் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு வீடியோ காலில் யார் பேசுகிறார்கள் என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
வீடியோ கால் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்துவது, ஆடியோவுடன் ஸ்கிரீன் ஷேரிங் வசதி மற்றும் ஸ்பீக்கர் ஸ்பாட் லைட் போன்ற அம்சங்கள் வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புது அம்சங்கள் மட்டுமின்றி பழைய சாதனங்கள் மற்றும் நெட்வொர்க் மோசமாக இருக்கும் சமயங்களில் வாட்ஸ்அப் கால் சேவையை சீராக வழங்குவதற்காக மெட்டா நிறுவனம் லோ பிட்ரேட் கோடெக் (MLow) எனும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.