Cricket
IPL 2025: டிராவிட் இல்ல இவர்தானாம்… கேகேஆரின் சர்ப்ரைஸ் மூவ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மெண்டாராக இருந்த கௌதம் காம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகியிருக்கும் நிலையில், புதிய மெண்டாராக லெஜண்ட் ஒருவரைத் தேர்வு செய்ய அந்த அணி நிர்வாகம் முனைப்புக் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
2024 ஐபிஎல்லில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கௌதம் காம்பீருக்குப் பிறகு புதிய மெண்டாரைத் தேர்வு செய்ய இருக்கிறது. அத்தோடு, துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கேகேஆர் அணி, தங்கள் கோச்சிங் ஸ்டாஃப்களை முழுமையாக மாற்றும் திட்டத்தை வைத்திருக்கிறது.
கௌதம் காம்பீர் இடத்தை நிரப்ப இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் ஆரம்பத்தில் வெளியாகின. ஆனால், சர்ப்ரைஸாக கொல்கத்தா அணி நிர்வாகம் தங்கள் அணியில் விளையாடிய முன்னாள் வீரரான ஜாக்ஸ் காலீஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்ற காம்பீர் தலைமையிலான கேகேஆர் டீமில் இருந்தவர்தான் தென்னாப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டரான கல்லீஸ். 2015 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்தார். பின்னர், 2019 வரையில் அடுத்த 4 சீசன்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர்.
2019-க்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் கோச்சாகினார். இந்தநிலையில், கௌதம் காம்பீருக்குப் பதிலாக கல்லீஸைத் தங்கள் அணியின் மெண்டாராக நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.