World News
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் கன்சர்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது.
இங்கிலாந்து பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் வரை உள்ள நிலையில், 6 மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பிரிட்டனில் உள்ள 650 தொகுதிகளிலும் நேற்று பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் வடக்கு யார்க்ஷயர் தொகுதியில் வாக்களித்தார். லேபர் கட்சி வேட்பாளர் ஸ்டார்மர் தனது மனைவி விக்டோரியாவுடன் வடக்கு லண்டன் தொகுதியில் வாக்களித்தார். இங்கிலாந்து நேரப்படி நேற்றிரவு 10 மணி வரையில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் யாரும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிராக இருக்கின்றன. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் தொழிலாளர் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று, ஆட்சியில் அமர இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த கீர் ஸ்டார்மர்?
லண்டனில் 1962-ம் ஆண்டு பிறந்த ஸ்டார்மர், சர்ரேவின் ஆக்ஸ்டட் நகரில் வளர்ந்தவர். இவரின் தந்தை மெக்கானிக் மற்றும் தாயார் தேசிய சுகாதாரத் திட்டத்தில் நர்ஸாகப் பணியாற்றியவர். இளம் வயதிலேயே அரசியல் ஈடுபாடு கொண்டிருந்த ஸ்டார்மர், 16 வயதிலேயே தன்னை தொழிலாளர் கட்சியில் இணைத்துக் கொண்டு களப்பணியாற்றியவர்.
லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டம் பயின்ற இவர் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலையில், சட்டத்துறையில் முதுகலை படிப்பை முடித்திருக்கிறார். ஆரம்ப காலம் முதலே மனித உரிமை ஆர்வலராக இருந்துவரும் ஸ்டார்மர், மனித உரிமைகளுக்காக நீதிமன்றங்கள் மட்டுமல்லாது பொதுவெளியிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறார்.
2008 – 2013 காலகட்டத்தில் இங்கிலாந்து அரசு வழக்கறிஞராக பல்வேறு வழக்குகளைத் திறம்பட கையாண்டவர். தொழிலாளர் கட்சியின் கோட்டையான செயிண்ட் பான்கராஸ் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2015-ல் முதல்முறையாக எம்.பியானார். கடந்த 2020-ல் ஜெர்மி கோர்பைனுக்குப் பிறகு தொழிலாளர் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.