Cricket
பிளாக் Armband அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள் – என்னாச்சு தெரியுமா?
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கிட்டத்தட்ட ஒன்பது மாத இடைவெளிக்கு பிறகு ஒருநாள் ஜெர்சியில் களமிறங்கியுள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் முதல் ஒருநாள் போட்டியின் போது கைப்பட்டையில் கருப்பு நிற பேண்ட் அணிந்து காணப்படுகின்றனர்.
முன்னாள் இந்திய அணி துவக்க வீரரும், பயிற்சியாளருமான அன்ஷூமான் கெய்க்வாட் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய வீரர்கள் முதலாவது ஒருநாள் போட்டியில் கையில் கருப்பு நிற பேண்ட் அணிந்துள்ளனர்.
“இந்திய அணியினர் மறைந்த முன்னாள் இந்திய அணி வீரர் மற்றும் பயிற்சியாளர் அன்ஷூமான் கெய்க்வாட் மறைவை தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தங்களது கைகளில் கருப்பு நிற பேண்ட் அணிந்துள்ளனர்,” என்று பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.
நீண்டகாலம் புற்றுநோய் பாதிப்பால் அவதியுற்று வந்த அன்ஷூமான் கெய்க்வாட் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை அன்ஷூமான் கெய்க்வாட் உயிரிழந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அன்ஷூமான் கெய்க்வாட் இந்திய அணிக்காக பத்து ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி இருக்கிறார்.
இவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்போது போன்று இல்லாமல், பாதுகாப்பு உபகரணங்கள் அதிகம் இல்லாமல் கிரிக்கெட் விளையாடப்பட்ட காலக்கட்டத்தில் உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களை அன்ஷூமான் கெய்க்வாட் திறம்பட எதிர்த்து விளையாடி இருக்கிறார்.
கடந்த 1976 ஆம் ஆண்டு ஜமைகாவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கெய்க்வாட் 81 ரன்களை விளாசினார். இதே போன்று ஜலந்தரில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவர் 201 ரன்களை குவித்தார். இவர் தனது கிரிக்கெட் காலக்கட்டத்தில் 12,000-க்கும் அதிக ரன்களை அடித்துள்ளார். இதில் 34 சதங்களும், 47 அரைசதங்களும் அடங்கும்.